நடிகை ஷோபனா உள்ளிட்ட 68 பேருக்கு பத்ம விருது: வழங்கினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு

6

புதுடில்லி: நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி உட்பட 68 பேருக்கு, டில்லி ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில், பத்ம விருதுகளை ஜனாதிபதி திரவுபதி முர்மு வழங்கினார்.

நாட்டின் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள், பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ என மூன்று பிரிவுகளில் வழங்கப்படுகின்றன. கலை, சமூகப் பணி, பொது விவகாரங்கள், அறிவியல் மற்றும் பொறியியல், வர்த்தகம் மற்றும் தொழில், மருத்துவம், இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு மற்றும் சிவில் சேவை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்தவர்களுக்கு இந்த

விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டு மத்திய அரசு 139 பத்ம விருதுகளை அறிவித்தது, இதில் ஏழு பத்ம விபூஷன், 19 பத்ம பூஷன் மற்றும் 113 பத்மஸ்ரீ விருதுகள் அடங்கும்.

முதல்கட்டமாக 71 பிரபலங்களுக்கு பத்ம விருதுகளை ஜனாதிபதி ஏற்கனவே வழங்கிய நிலையில், இன்று 2வது கட்டமாக 68 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்த முறை பத்ம விருது பெற்றவர்களின் பட்டியலில் 23 பெண்கள் இடம் பெற்றிருந்தனர்.

அவர்களில், நடிகை ஷோபனா, நல்லி குப்புசாமி ஆகியோருக்கு பத்மபூஷன் விருதுகள் வழங்கப்பட்டன. முன்னாள் இந்திய தலைமை நீதிபதி ஜெகதீஷ் சிங் கேஹர் மற்றும் குமுத்னி ரஜினிகாந்த் லக்கியா ஆகியோருக்கு பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.

ஜதின் கோஸ்வாமி, கைலாஷ் நாத் தீட்சித், சாத்வி ரிதம்பரா ஆகியோர் பத்ம பூஷண் விருதுகளும், பிரபல பொருளாதார நிபுணர் பிபேக் தேப்ராய் மறைவுக்குப் பிறகு கவுரவிக்கப்பட்டனர். மந்த கிருஷ்ண மடிகா, டாக்டர் நீர்ஜா பட்லா, சாந்த் ராம் தேஸ்வால் மற்றும் சையத் ஐனுல் ஹசன்,கண்ணப்பா சம்பந்தன் ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டடது.

Advertisement