த.வெ.க.,வினர் தாக்கப்பட்ட புகார் போலீஸ் விளக்கம்

சென்னை:சென்னை வியாசர்பாடியில், தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய, த.வெ.க., நிர்வாகிகளை போலீசார் தாக்கியதாக சொல்லப்படுவது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவத்திற்கு த.வெ.க., தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:

சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் ஏற்பட்ட தீ விபத்திற்கு பின், சில அமைப்பின் நிர்வாகிகள், காவல் துறையினரால் தாக்கப்பட்டதாக, செய்திகள் பரவின.

இதன் தொடர்ச்சியாக, சிலர் அளித்த புகாரையடுத்து, சென்னை பெருநகர வடக்கு மண்டல இணை கமிஷனர் விசாரித்து அளித்த அறிக்கையின்படி, காவல் துறையினரால் சம்பந்தப்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் தாக்கப்பட்டதாக தெரியவில்லை.

மேலும், விசாரணையில் ஒரு சிலர், பொய்யான கருத்துக்களை, பரப்புவது தெரிய வருகிறது. எனினும், சென்னை போலீஸ் கமிஷனர், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு துணை கமிஷனரை நியமித்துள்ளார்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement