பா.ஜ., நிர்வாகி கிடங்கில் பொருட்கள் எரிந்து நாசம்

கொருக்குப்பேட்டை, கொருக்குபேட்டை, மூப்பனார் நகரைச் சேர்ந்தவர் நடராஜன், 57; பா.ஜ., சிந்தனையாளர் பிரிவு மாநில செயலர்.

இவருக்கு கொருக்குப்பேட்டை, மணலி சாலையில், 20 சென்ட் பரப்பளவில், 'ராஜம் டிரேடர்ஸ்' என்ற பெயரில் கிடங்கு உள்ளது. 20 ஆண்டுகளாக பழைய இரும்பு, பிளாஸ்டிக், அட்டை பெட்டி வைத்து விற்று வருகிறார்.

நேற்று மதியம் 2:00 மணிக்கு, இவரது கிடங்கில் திடீரென தீ பற்றி கரும்புகை வெளியேறியது.

அங்கிருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியேறினர். வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, இரண்டு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

எனினும், தீ மளமளவென பரவியதில் கிடங்கில் இருந்த அட்டை பெட்டி, பிளாஸ்டிக் என, பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்து குறித்து, ஆர்.கே.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

தீ விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து, 50 அடி தொலையில் பாரத் பெட்ரோலியம் பங்க் உள்ளது. இந்த தீ அங்கு பரவாததால், பெரிய பாதிப்பு இல்லை.

Advertisement