முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு மசோதா; கவர்னருக்கு மீண்டும் அனுப்பியது அரசு

பெங்களூரு : முஸ்லிம் ஒப்பந்ததாரர்களுக்கு அரசு பணிகளில் 4 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் திருத்த மசோதாவவில், கவர்னர் தாவர்சநத்த கெலாட் கேட்டிருந்த விளக்கங்களை பூர்த்தி செய்து, மசோதாவை மீண்டும் ராஜ்பவனுக்கு அனுப்பியுள்ளது.
அரசு பணிகளுக்கான ஒப்பந்தம் அளிப்பதில், முஸ்லிம் சமுதாயத்தினருக்கு இட ஒதுக்கீடு அளிக்க, கர்நாடக அரசு முடிவு செய்தது; இதற்கான சட்டத்திருத்தம் கொண்டு வந்தது.
இந்த மசோதாவை சட்டசபை, மேல்சபையில் தாக்கல் செய்து நிறைவேற்றியது. இம்மசோதாவுக்கு எதிர்க்கட்சிகளான பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் பலத்த எதிர்ப்பு தெரிவித்தன.
மத அடிப்படையில், ஒப்பந்ததாரர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது.
முஸ்லிம்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் நோக்கில், அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க, அரசு முற்பட்டது என, குற்றம் சாட்டினர்.
ஆனால் அரசு பொருட்படுத்தாமல், கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் ஒப்புதலுக்காக அனுப்பியது.
மசோதாவில் உள்ள சில அம்சங்களுக்கு, கவர்னர் ஆட்சேபனை தெரிவித்தார். 'மத அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு, அரசியல் சாசனத்தில் அனுமதி இல்லை. முஸ்லிம்கள் மட்டுமே இடம் பெறும் வகையில், சட்டத்திருத்தம் கொண்டு வரப்படுகிறது.
இதற்கு அரசியல் சாசனத்தில் இடம் இல்லை. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் சில வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்புகளை கோடிட்டு காட்டி இருந்தார். இதில் கையெழுத்திடாமல் அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
இதற்கிடையே மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கக்கூடாது என்று பா.ஜ.,வும், ம.ஜ.த.,வும் கவர்னரை சந்தித்து வேண்டுகோள் விடுத்தனர்.
ஆனால், மசோதாவுக்கு எப்படியாவது கவர்னரின் ஒப்புதல் பெற, காங்., அரசு முயற்சிக்கிறது. கவர்னர் கேட்டிருந்தபடி விளக்கம் அளித்து, மசோதாவை நேற்று மீண்டும் ராஜ்பவனுக்கு அரசு அனுப்பி உள்ளது.