வருகிறது மின் பற்றாக்குறை! சரிசெய்ய நடவடிக்கை எடுக்க மத்திய அரசு அறிவுறுத்தல்

சென்னை: 'தமிழகத்தில் மின்தேவையை பூர்த்தி செய்வதில் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது; அதை சரிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக மின் வாரியத்துக்கு, மத்திய மின் துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழக மின் நுகர்வு மற்றும் தேவையை பூர்த்தி செய்ய, அனல், எரிவாயு, நீர், காற்றாலை உள்ளிட்ட பல வகை மின்சாரத்தை மின்வாரியம் பயன்படுத்துகிறது. இதில், மாசு ஏற்படுத்தாத, காற்றாலை, சூரியசக்தியை உள்ளடக்கிய புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தின் பங்கு, குறிப்பிட்ட அளவில் கட்டாயம் இருக்க வேண்டும். இது, ஆர்.பி.ஓ., எனப்படும், 'ரினிவபில் பர்சேஸ் ஆப்ளிகேஷன்' ஆகும்.
தமிழக அரசு, 2030ல், மாநிலத்தின் மொத்த மின் நுகர்வில், 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்சாரம் வாயிலாக பூர்த்தி செய்ய திட்டமிட்டு உள்ளது. ஆனால், சூரியசக்தி, காற்றாலை மின் திட்டங்களை செயல்படுத்த அனுமதி அளிப்பதில், மின்வாரியம் தாமதம் செய்கிறது. மேலும், இம்மின் நிலையங்களை சொந்தமாக அமைக்கவும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில், தமிழக எதிர்கால மின் தேவையை கணித்து, அதை பூர்த்தி செய்ய, போதுமான மின் உற்பத்தி வளங்களை உறுதி செய்வதற்காக, நீண்ட கால தேவை, மின் வழங்கல் போன்ற வற்றை உள்ளடக்கிய, வள திட்டமிடல் அறிக்கையை மத்திய மின் துறை வெளியிட்டுள்ளது.
இதில், காற்றாலை, சூரிய சக்தியை உள்ளடக்கிய, புதுப்பிக்கத்தக்க மின்சார பங்கான ஆர்.பி.ஓ., அளவில், தொடர்ந்து பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, 2025 - 26ல், மொத்த மின் நுகர்வில், ஆர்.பி.ஓ., 5,039 கோடி யூனிட்கள் இருக்க வேண்டும். ஆனால், 4,497 கோடி யூனிட் தான் கிடைக்கும். பற்றாக்குறை, 542 கோடி யூனிட்கள் இருக்குமாம்.
கடந்த, 2024 - 25ல், ஆர்.பி.ஓ., அளவு, 4,260 கோடி யூனிட்களாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 4,040 கோடி யூனிட்கள் தான் கிடைத்தது. இதனால், 220 கோடி யூனிட் பற்றாக்குறை ஏற்பட்டது.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தமிழகத்தில் மின் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், அதை சரிசெய்ய புதிய மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்துமாறும், மத்திய மின்துறை தெரிவித்துள்ளது. 'அதற்கேற்ப, புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதலில், ஆர்.பி.ஓ., அளவை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.