அரசு மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை; அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தகவல்

கொப்பால் : ''கொரோனாவை எதிர்கொள்ள, அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு, சிகிச்சை அளிக்கப்படும்,'' என மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
கொரோனா தொற்று அதிகரிப்பதால், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கை குறித்து, அரசு மருத்துவ கல்லுாரிகளின் இயக்குனர்களுடன், அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல், காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின் அவர் அளித்த பேட்டி:
பெங்களூரில் கொரோனா தொற்று அதிகரிக்கிறது. இது மேலும் பரவாமல் கட்டுப்படுத்தும் நோக்கில், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். தேவையான உத்தரவு பிறப்பித்தேன்.
நெறிமுறைகள்
கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக, சுகாதாரத்துறை, எங்களுக்கு நெறிமுறைகள் வகுத்து கொடுத்துள்ளது; அதன்படி செயல்படுகிறோம்.
கர்ப்பிணியர், மூத்த குடிமக்கள், உடல் ஆரோக்கிய பிரச்னைகள் உள்ளவர்கள் முக கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.
பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. உடல் நிலை பாதிப்பு உள்ள சிறார்கள், பள்ளிக்கு வர வேண்டாம் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரிசோதனை அளவு அதிகரிக்கப்படுகிறது. மக்கள் பயப்பட தேவையில்லை. சுகாதாரத்துறை பிறப்பிக்கும் நெறிமுறைகளை தவறாமல் பின்பற்ற வேண்டும்.
மருத்துவ கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மருத்துவமனை இயக்குனர்களுடன் ஆலோசனை நடத்தினேன். கொரோனா பரிசோதனை உபகரணங்கள், மருந்துகள் உட்பட அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
ஏதாவது பற்றாக்குறை இருந்தால், உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என, மருத்துவமனைகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
ஆக்சிஜன் வசதி
அனைத்து மருத்துவமனைகளிலும், ஆக்சிஜன் வசதி இருக்க வேண்டும். வென்டிலேட்டர் உள்ளதா, இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
தற்போதைக்கு முக கவசம் கட்டாயமாக்கப்படவில்லை. ஆனால் கர்ப்பிணியர், வயதானவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் முக கவசம் அணிவது கட்டாயம்.
மருத்துவமனைகளுக்கு வருவோர், முக கவசம் அணிவது நல்லது. அனைத்து அரசு மருத்துவமனைகளிலும், கொரோனாவுக்கு சிகிச்சை கிடைக்கும்.
இதற்கு தேவையான மருந்துகள், படுக்கை வசதி, ஆக்சிஜன் என, அனைத்து வசதிகளும் உள்ளன. பற்றாக்குறை ஏதும் இல்லை.
கொரோனா பரவாமல் தடுக்க, நடவடிக்கை எடுக்கும்படி, பெங்களூரு மாநகராட்சிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நகர மக்கள் பீதியடைய வேண்டாம். அவசியம் ஏற்பட்டால் தடுப்பூசி போடுவது குறித்து ஆலோசிக்கிறோம். இது குறித்து, மத்திய அரசுடன் தொடர்பில் இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.