ஜூனியர் உலகக்கோப்பை தயாராகிறது மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானம்

மதுரை : இந்தாண்டு டிசம்பரில் நடக்கவுள்ள ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிக்காக மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் பார்வையாளர்கள் காலரி அமைப்பதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணி தொடங்கியது.

ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 11 பேர் விளையாடும் வகையில் சர்வதேச தரத்தில் ஹாக்கி அரங்கு இருந்தாலும் காலரி, வீரர்கள் தங்குமிடம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. இதுவரை இரண்டு முறை தேசிய அளவில் ஹாக்கிப் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன. முதன்முறையாக சென்னையை அடுத்து மதுரையிலும் 2025 டிசம்பரில் ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டி நடத்த தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்திலும் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திலும் இதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை செய்வதற்கு ரூ.55 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை ஸ்டேடியத்தில் கடந்தாண்டு ஆசியப்போட்டி நடத்துவதற்காக புதிய செயற்கை 'டர்ப்' அமைக்கப்பட்டு வசதிகள் செய்யப்பட்ட நிலையில் தற்போது மதுரைக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட உள்ளன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தின் ஹாக்கி அரங்கில் செயற்கை 'டர்ப்' ஏற்கனவே அமைக்கப்பட்டு, மின்னொளியில் போட்டிகள் நடத்தும் வகையில் நான்கு பக்கமும் 'ஹைமாஸ்' விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.

'டர்ப்' அமைத்து பல ஆண்டுகள் ஆன நிலையில் புதிதாக 'டர்ப்' அமைக்கப்படுகிறது. ஹாக்கி அரங்கையொட்டி கீழ்த்தளத்தில் வீரர்களுக்கான உடைமாற்றும் அறை, மீடியா அறை, முதலுதவி அறை, அலுவலர்களுக்கான அறைகள் அமைக்கப்படும். மேல்தளத்தில் இருபிரிவாக ஆயிரம் பேர் அமரும் வகையில் காலரி, வி.ஐ.பி.,களுக்கான தனியிடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அஸ்திவாரம் தோண்டும் பணி துவங்கியது. நவம்பருக்குள் பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீரர்கள் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவர். அதற்கான வசதிகள் இங்கில்லை.

டிசம்பரில் நடக்க உள்ள உலகக்கோப்பை ஜூனியர் ஹாக்கியில் மொத்தம் நடைபெற உள்ள 72 போட்டிகளில் 40 போட்டிகள் வரை மதுரையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Advertisement