தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் நெரிசல்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகரின் முக்கிய சாலையோரம் நிறுத்தப்படும் இரு சக்கர வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கள்ளக்குறிச்சி போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாக விளங்குகிறது. நகரின் முக்கிய சாலைகளான காந்தி சாலை, சேலம், சங்கராபுரம் ஆகிய சாலைகளில் அரசு அலுவலகங்கள், வங்கிகள், வணிக நிறுவனங்கள் உள்ளன. இதனால் எப்போதும் மக்கள் நடமாட்டமும், போக்குவரத்து நெரிசலும் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக சங்கராபுரம் சாலையில் போலீஸ் நிலையங்கள், கோர்ட் ஆகியவை உள்ளதால், வாகன போக்குவரத்து அதிகளவில் உள்ளது.
இந்நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோரங்களில், வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி விட்டு செல்வதால், போதிய வழியின்றி இடநெருக்கடி ஏற்பட்டு கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அவ்வப்போது விபத்துகளும் நடக்கின்றன
காலை, மாலை அலுவல் நேரங்களில் பள்ளி, கல்லுாரி வாகனங்கள் நகரை கடந்து செல்லும் போது, கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.
அதனால், நகரின் முக்கிய சாலைகளின் இருபுறமும் தாறுமாறாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொண்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.