ஜிப்மரில் ஆயுர்வேத மருத்துவ படிப்பு மத்திய இணை அமைச்சர் தகவல்

புதுச்சேரி : ஜிப்மரில் அடுத்த கல்வியாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., ஆயுர்வேத இன்டர்கிரேட் மருத்துவ படிப்புகளை துவங்க ஆலோசித்து வருவதாக மத்திய இணை அமைச்சர் தெரிவித்தார்.

ஜிப்மரில் புதுப்பிக்கப்பட்ட அவசர மற்றும் விபத்து சிகிச்சை பிரிவை திறந்து வைத்த பின், மத்திய இணை அமைச்சர் பிரதாப் ராவ் ஜாதவ் கூறியதாவது;

தென்னகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இணையாக ஜிப்மர் இயங்கி வருகிறது. ஜிப்மரில் பல சிகிச்சை பிரிவுகளின் வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. புதிய கட்டுமானங்கள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட உள்ளது.

அடுத்த கல்வியாண்டு முதல் எம்.பி.பி.எஸ்., ஆயுர்வேத இன்டர்கிரேட் மருத்துவ படிப்புகளை துவங்க ஆலோசித்து வருகிறோம். நடப்பாண்டு ஜிப்மருக்கு 1,450 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனை கிளை 470 படுக்கை வசதிகளுடன், வரும் 2027ம் ஆண்டு ஜூன் மாதத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

காரைக்காலில் அரசு மருத்துவ கல்லுாரி அமைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். சண்டிகர் எய்ம்ஸ் மருத்துவமனையில் கட்டணத்திற்கு அளிக்கப்படும் கேன்சர் உள்ளிட்ட மருத்துவ சிகிச்சைகள், மருத்துகள் ஜிப்மரில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஜிப்மரில் மானிய விலையில் மருந்துகள் வழங்கும் வகையில் மக்கள் மருந்தகம் அமைக்கப்பட்டுள்ளது.

பிரசவத்திற்கு புதுச்சேரி மக்கள் அனுமதிக்கப்படுவதில்லை என, புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மருந்து வாங்க நீண்ட வரிசையில் நிற்பதை தடுக்கும் வகையில் கூடுதல் கவுண்டர்கள் அமைப்படும்' என்றார்.

Advertisement