காங்., நிர்வாகி மீது ரூ.7 லட்சம் மோசடி புகார் எஸ்.பி.,யிடம் பள்ளிவாசல் இமாம் மனு
ஈரோடு, ஈரோடு கொல்லம்பாளையத்தை சேர்ந்தவர் முகமது அமீன், 33; ஈரோடு எஸ்.பி., சுஜாதாவிடம், நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கொல்லம்பாளையம் பள்ளி வாசலில், 11 ஆண்டாக இமாமாக உள்ளேன். கடந்த, 2021ல் ஜூபைர் அகமது, நிசார் முகமது அறிமுகமாகினர். இருவரும் பங்குதாரர்கள் என்று கூறினர்.
மணி டிரேடிங்கில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் கிடைக்கும் என்று கூறி, 7 லட்சம் ரூபாய் பெற்றனர். ஆறு மாதங்கள் வரை முதலீடு லாபம் என்று கூறி சிறு தொகை அளித்தனர். அதன் பின் பணம் வரவில்லை. பலமுறை தொடர்பு கொண்ட நிலையில் தட்டிக்கழித்தனர்.
இதனால் பணத்தை திருப்பி கேட்டபோது, தர மறுத்து கொலை மிரட்டல் விடுத்தனர். என்னிடம் மோசடி செய்த, 7 லட்சம் ரூபாயை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.
இதேபோல், 50 பேரிடம், ௨.௭௫ கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்துள்ளனர். ஈரோடு மாவட்ட பள்ளிவாசல் இமாம்கள் மட்டுமின்றி, ராமநாதபுரத்திலும் பணம் பெற்று மோசடி செய்துள்ளதாக கூறி அவருடன் வந்த சிலர் ஆதாரங்களுடன் புகார் அளித்தனர். மோசடியில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டுள்ள ஜூபைர் அகமது, ஈரோடு காங்., சிறுபான்மை பிரிவு தலைவராக உள்ளார்.
இதுகுறித்து ஜூபைர் அகமது கூறியதாவது:
மூன்றாண்டாக இதுபோன்ற புகார் கூறி வருகின்றனர். கடந்த, 2023ல் இப்பிரச்னைக்காக அவர்களுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். மொடக்குறிச்சி, வீரப்பன்சத்திரம் போலீசில் புகாரளித்துள்ளேன். வேறு யாரோ ஒருவர் வாங்கிய பணத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும்.
இவ்வாறு கூறினார்.