அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம்: கலெக்டர் ஆய்வு

கள்ளக்குறிச்சி : பேரூராட்சி அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை சிறப்பாக மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பேரூராட்சி பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளதால், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் அரசு உதவி பெறும் பள்ளிகள் விவரம், மாணவர் எண்ணிக்கை, காலை உணவுத் திட்ட கண்காணிப்பு குழுக்களின் கடமை மற்றும் பொறுப்புகள் குறித்து கேட்டறியப்பட்டது.

தொடர்ந்து பள்ளிக் குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணிகளை மேற்கொள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள், பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள், சமையல் கூடங்களின் நிலை, பொருட்கள் வைப்பறை, மின் இணைப்பு, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது.

மையங்களை ஆய்வு செய்ய அமைத்துள்ள மாவட்ட, வட்டார அளவிலான கண்காணிப்பு குழுக்கள், பேரூராட்சி அளவிலான முதன்மைக் குழு போன்றவைகளின் விவரங்கள் கேட்டறியப்பட்டன.

காலை உணவு திட்டத்தை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.

இதில் டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார் சிங், மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement