வெளிநாடு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி: இருவர் கைது
ராமநாதபுரம்:ராமநாதபுரத்தில் -வெளி நாட்டில் வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.16 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் அருகே மேலசீத்தையைச் சேர்ந்த சந்தானம் மகன் கர்ணராஜா 32. இவர் வங்கி ஒன்றின் அலைபேசி ஏ.டி.எம்., பொறுப்பாளராக பணிபுரிந்து வந்தார். இவர் வெளி நாட்டு வேலைக்கு செல்ல போக்குவரத்துநகரைச் சேர்ந்த சங்கரன் மகன் கேசவனை 55, தொடர்பு கொண்டார். கேசவன்,''பிரான்ஸ் நாட்டில் சாக்லேட் தொழிற்சாலையில் வேலை இருப்பதாகவும், 3 பேரை ஒன்றாக அனுப்ப வேண்டும்,'' என்றார். அதை நம்பிய கர்ணராஜா நண்பர்கள் ராஜசேகர், சரத்குமார் ஆகியோரை சேர்த்துக் கொண்வு பணத்துடன் கேசவனை தொடர்பு கொண்டனர். 2024 செப்., 19ல் மூவரும் கேசவனை சந்தித்தனர். அவர் பனைக்குளம் அருகே அத்தியூத்து சகாபுதீன் மகன் முஹம்மது யூசுப் அலியை அவர்களிடம் அறிமுகம் செய்து வைத்தார். இவர்களிடம் வெளிநாட்டு வேலைக்காக ரூ.11 லட்சத்து 40 ஆயிரம் வழங்கினர். பணம் வாங்கிய கேசவன், முஹம்மதுயூசுப் அலி வெளி நாட்டிற்கு அவர்களை அனுப்பாமல் ஏமாற்றினர்.
இதனால் கர்ணராஜா பணத்தை திருப்பி கேட்டார். அதற்கு இருவரும் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கர்ணராஜா கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். கேசவனையும், முஹம்மது யூசுப் அலியையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
மற்றொரு குற்றச்சாட்டு
போலீசார் கூறியதாவது: சத்திரக்குடி சண்முகவேல் மகன் முருகானந்தத்தை 41, அர்மேனியா அனுப்பி வைப்பதாகவும், அங்கு தன் மகன் ஹாரிஸ் வேலை செய்வதாகவும், அவன் நன்றாக பார்த்துக்கொள்வான் எனவும் கூறி கேசவன் ரூ.4.20 லட்சம் பெற்றுள்ளார். பின் முருகானந்தத்தை சுற்றுலா விசாவில் துபாய் அனுப்பியுள்ளார் கேசவன். அங்கு வேலை வாய்ப்பு இல்லாமல் சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்ட நிலையில் நாடு திரும்பினார் முருகானந்தம். அவரது புகாரின் பேரில் கேணிக்கரை போலீசார் கேசவன், ஹாரிஸ் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாக பலரை ஏமாற்றி இவர் மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது. வெளிநாட்டில் உள்ள ஹாரிசை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றனர்.