பெருக்கரணை பாலப்பணிகள் விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

சித்தாமூர்:பெருக்கரணை கிராமத்தில், சாலை நடுவே பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.
சித்தாமூர் அருகே மதுராந்தகம் - வெண்ணாங்குப்பட்டு மாநில நெடுஞ்சாலையில் இருந்து பெருக்கரணை கிராமத்திற்குச் செல்லும், 3.6 கி.மீ., துார தார்ச்சாலை உள்ளது.
இந்த சாலையை கரிக்கந்தாங்கல், பழவூர், கன்னிமங்கலம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட கிராமத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.
இது, பெருக்கரணை கிராமத்திலுள்ள மரகத தண்டாயுதபாணி கோவிலுக்குச் செல்லும் பிரதான சாலை.
இந்த சாலை நடுவே, ஏரி உபரிநீர் கால்வாயை கடக்கும் பகுதியில் பாலம் அமைக்கும் பணி, கடந்த ஆறு மாதங்களாக நடந்து வருகிறது.
பணிகள் மந்தமாக நடைபெற்று வருவதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
மேலும், பாலம் கட்டுமான பணி நடக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளில், எச்சரிக்கை 'ஸ்டிக்கர்' ஒட்டப்படாமல் உள்ளதால், இரவு நேரத்தில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள், தடுப்பில் மோதி விபத்துக்குள்ளாகின்றனர்.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.