நுாலகத்துக்குள் புகுந்து வாலிபருக்கு சரமாரி வெட்டு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம், ஆர்.சி. வடக்குத் தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளி சிலுவைராஜ், 40, என்பவரும், சிதம்பராபுரத்தை சேர்ந்த அமுதா என்பவரும், சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த அமுதா, சில மாதங்களாக அவரது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதுதொடர்பாக சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அமுதா புகார் செய்தார். அமுதாவுக்கு ஆதரவாக, உறவினர் பிரபு, 38, என்பவர் பேசியுள்ளார்.

இந்நிலையில், சாத்தான்குளம் பழைய பஸ் நிலையம் அருகே நின்ற பிரபுவிடம் தகராறு செய்த சிலுவைராஜ், அவரது தம்பி அன்னராஜ், 35, உறவினர் அகில், 31, ஆகியோர், அரிவாளால் வெட்ட முயன்றனர்.

இதில், அருகே இருந்த கிளை நுாலகத்திற்குள் பிரபு நுழைந்த நிலையில், அங்கும் விரட்டி சென்று, அவரை அரிவாளால் வெட்டினர்.

புகாரில், மூன்று பேரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement