ஒரு லட்சம் டன் 'மிக்சர் சால்ட்' தேக்கம் அரசு உதவியை நாடும் சாய ஆலைகள்
திருப்பூர்:திருப்பூர் பின்னலாடை உற்பத்தியில், முதுகெலும்பாக சாய ஆலைகள் விளங்குகின்றன. இங்கு, 350க்கும் அதிகமான சாய ஆலைகள் இணைந்து, 18 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைத்து, சாயக்கழிவு நீரை சுத்திகரித்து வருகின்றன.
இந்தியாவில் எங்கும் இல்லாத வகையில், 'ஜீரோ டிஸ்சார்ஜ்' தொழில்நுட்பத்தில் சுத்திகரிப்பு நடைபெற்று வருகிறது.
தினமும், 13 கோடி லிட்டர் சாயக்கழிவு நீர் சுத்திகரிக்கப்படுகிறது. அதில், 10 கோடி லிட்டர் மீண்டும் பயன்படுத்தும் சுத்தமான தண்ணீராக சுத்திகரித்து, மறுசுழற்சி முறையில் பயன்படுத்தப்படுகிறது.
கழிவுநீரில் இருந்து, ரசாயனங்கள் மற்றும் சுண்ணாம்பு கலந்த 'ஸ்லெட்ஜ்' எனப்படும் திடக்கழிவு பிரித்து எடுக்கப்படுகிறது. நிறைவாக, உப்பு பிரிக்கப்பட்டு, மறுபயன்பாட்டுக்கு இருப்பு வைக்கப்படுகிறது.
மீண்டும் பயன்படுத்த முடியாத, மிக்சர் சால்ட், கடைசியில் கிடைக்கிறது. ஒரு லட்சம் டன்னுக்கும் மேலாக, மிக்சர் சால்ட் தேக்கமடைந்துள்ளது. ஸ்லெட்ஜ், சிமென்ட் ஆலைகளில் மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. ஒரு டன்னுக்கு, 4,500 ரூபாய் கொடுத்து, ஸ்லெட்ஜ் அனுப்பி வைக்கப்படுகிறது.
சாய ஆலை உரிமையாளர்கள் கூறுகையில், 'மாசு கட்டுப்பாடு வாரிய அனுமதியுடன், ஒரு நிறுவனம் மட்டும், மிக்சர் சால்ட் கழிவை எடுத்து சுத்திகரித்து வருகிறது. அதற்காக, டன் ஒன்றுக்கு, 6,900 முதல், 7,500 ரூபாய் வரை செலவழிக்கப்படுகிறது.
'எப்படியாவது மிக்சர் சால்ட் காலியாக வேண்டும் என காத்திருக்கிறோம். தமிழக அரசு, கூடுதல் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
'மிக்சர் சால்ட் உருவாவதை குறைக்கும் வகையில், புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்து, அமல்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.
மேலும்
-
அகாலிதளத்தின் முக்கிய தலைவர் சுக்தேவ் மறைவு: அரசியல் கட்சியினர் இரங்கல்
-
பிரசன்ன மஹா கணபதி கோவில் கும்பாபிஷேக தின உற்சவம்
-
பாக்., எல்லையை ஒட்டிய மாநிலங்களில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைப்பு
-
மகன் மார்க் குறைவால் பெண் டாக்டர் தற்கொலை
-
பழங்குடியின வாலிபரை கட்டி வைத்து தாக்கிய சம்பவம்: இருவர் கைது
-
8 மாவட்டங்களில் சராசரியை ஒட்டியே தென்மேற்கு பருவ மழை கிடைக்கும்: கோவை வேளாண் பல்கலை கணிப்பு