வாகன ஓட்டிகளுக்கு முறையாக பயிற்சியளித்து ஓட்டுனர் உரிமம் வழங்க அமைச்சர் அறிவுறுத்தல்


தர்மபுரி வாகன ஓட்டிகளுக்கு முறையாக பயிற்சி அளித்து, ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும் என, சாலை பாதுகாப்பு குறித்து ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் வேலு பேசினார்.
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடு தல் கூட்டரங்கில், சாலை பாதுகாப்பு குறித்த துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம், பொதுப்பணித்துறை அமைச்சர் வேலு மற்றும் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் நடந்தது. கலெக்டர் சதீஸ் வரவேற்றார்.அமைச்சர் வேலு பேசியதாவது:

சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, ஐந்து முனை திட்டம், நெடுஞ்சாலை, போக்குவரத்து, காவல், சுகாதாரம் மற்றும் கல்வித்துறை ஆகிய, 5 துறைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

தமிழகத்தில் விபத்தை குறைப்பதற்கும், சாலை பாதுகாப்பை செயல்படுத்தவும் நெடுஞ்சாலைத்துறை சார்பில், சாலை கட்டமைப்பு, சாலைகளை சீரமைத்தல், நடைபாதை அமைத்தல், சேவை சாலை அமைத் தல், விபத்து பகுதியில் ஒளிரும் விளக்குகளை அமைத்தல் நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாலைகளை தோண்டினால் உடனே சீரமைக்க கவனம் செலுத்த வேண்டும். திருப்பூர் மாவட்டத்தில் சாலை பணிக்கு தோண்டிய பள்ளத்தில் விழுந்து இருவர் உயிரிழந்தனர். இதற்காக, 2 பொறியாளர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்
வாகனத்தில் மொபைல்போன் பேசிக் கொண்டு செல்வோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர், சரக்கு ஆட்டோவில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வோர் மீது, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு முறையாக பயிற்சி அளித்து ஓட்டுனர் உரிமம் வழங்க வேண்டும். சாலை விதிகள் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஜன., முதல், மார்ச் வரை நடந்த, 393 விபத்துக்களில், 91 பேர் உயிரிழந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தை விபத்தில்லா மாவட்டமாக மாற்ற துறை அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
தொடர்ந்து, 475 பயனாளிகளுக்கு, 7.61 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் வேலு, பன்னீர்செல்வம் வழங்கினர். கூட்டத்தில், தர்மபுரி, தி.மு.க., -- எம்.பி., மணி, பா.ம.க., -- எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, வெங்கடேஸ்வரன் மற்றும் அனைத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement