கடும் விளைவுகள் இருக்கும்; அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்: சசி தரூர்

3

பனாமா சிட்டி: ''பயங்கரவாதிகள் தாங்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம்" என காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தெரிவித்தார்.


பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவு நிலையை உலக நாடுகளுக்கு அம்பலப்படுத்துவதற்காக அனைத்து கட்சிகளையும் சேர்ந்த எம்.பி.,க்கள் அடங்கிய குழுவினர் பல்வேறு நாடுகளுக்கு சென்று, அங்குள்ள தலைவர்களுக்கு விளக்கி வருகின்றனர்.

காங்கிரஸ் எம்.பி., சசி தரூர் தலைமையிலான குழு கயானா, பனாமா, கொலம்பியா, பிரேசில் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தலைமையிலான குழுவினர் பனாமா நகரில் அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்தனர். பனாமா பார்லி., உறுப்பினர்களிடம் சசி தரூர் கூறியதாவது:



ஏப்ரல் 22ம் தேதி பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமானவர்கள் மீது பாகிஸ்தான் அரசு ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா? என்று காத்திருந்தோம். பின்னர் தான் மே 7ம் தேதி இந்தியா ஆபரேஷன் சிந்தூர் திட்டத்தைத் தொடங்கியது. பாகிஸ்தானுக்குள் இருக்கும் பயங்கரவாத முகாம்களின் தலைமையகத்தைத் தாக்கினோம்.


போரைத் தொடங்குவதில் எங்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. ஆனால் பயங்கரவாதிகள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். நாங்கள் அனைவரும் வெவ்வேறு அரசியல் பின்னணியிலிருந்தும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகிறோம், ஆனால் நாங்கள் தேசிய நோக்கத்தில் ஒன்றுபட்டுள்ளோம்.

பயங்கரவாதிகள் தாங்கள் நடத்தும் தாக்குதல்களுக்கு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பயங்கரவாதத்திற்கு எதிரான நாட்டின் உறுதியான நிலைப்பாட்டை எடுத்துரைக்கும் வகையில், எல்லை கடந்து சென்று பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்களை இந்தியா தாக்கியது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement