போதைப்பொருள் பயன்படுத்துகிறேனா? எலான் மஸ்க் சொல்வது இதுதான்!

வாஷிங்டன்: போதைப்பொருள் பயன்படுத்துவதாக பரவி வரும் செய்திக்கு, பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், மருத்துவரின் பரிந்துரையின் பேரில் கெட்டமைன் மட்டும் பயன்படுத்தியதாக அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்பின் நெருக்கமான நண்பரும், முன்னணி தொழிலதிபருமான எலான் மஸ்க்,. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை ஆதரித்து தீவிர பிரசாரம் செய்தார்.
டிரம்ப் அதிபராக பொறுப்பேற்ற பின் எலான் மஸ்க்கை சிறந்த நிர்வாகத்துக்கான துறை தலைவர் என்ற சிறப்பு பதவியில் அமர்த்தினார். அமெரிக்க அரசின் செலவுகளை குறைப்பது, நிறுவனங்களை சீரமைப்பது போன்ற பணிகள் ஒப்படைக்கப்பட்டன. இந்த பதவியில் 130 நாள் பணியாற்றுவதற்கு ஒப்புக் கொண்ட அவர், சொன்னபடி அந்தப் பொறுப்பில் இருந்து விலகினார். அதன்பிறகு, தனது தொழில்களை கவனிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சமீபத்தில் டிரம்ப்பை சந்தித்த போது செய்தியாளர்களிடம் பேசிய எலான் மஸ்க், தான் டிரம்ப்பின் சிறந்த நிர்வாகத்துக்கான துறையில் பணியாற்றிய போது, போதைப்பொருட்களை பயன்படுத்தியதாக பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டதற்கு தனது அதிருப்தியை தெரிவித்திருந்தார். மேலும், அதுபோன்று தான் எதனையும் செய்யவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார்.
இதனிடையே, எக்ஸ் தளத்தில் எலான் மஸ்க் போதைப்பொருள் பயன்படுத்துவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த எலான் மஸ்க், " நான் எந்த போதைப்பொருளையும் பயன்படுத்தவில்லை. நியூயார்க் டைம்ஸ் பொய்யான செய்தியை வெளியிட்டுள்ளது. மருத்துவர் பரிந்துரையின் பேரில், மன அழுத்தத்தில் இருந்து வெளியேறுவதற்காக, கெட்டமைனை சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்படுத்தினேன். அதை ஏற்கனவே எக்ஸ் தளத்தில் கூறியுள்ளேன். எனவே, அது ஒரு செய்தி கூட கிடையாது. தற்போது, அதையும் நான் பயன்படுத்துவது கிடையாது, எனக் குறிப்பிட்டுள்ளார்.