ஹாக்கி: இந்தியா ஏமாற்றம்

ஆம்ஸ்டர்டாம்: சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், புரோ லீக் தொடர் நடக்கிறது. 9 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி தனது 10 வது போட்டியில் நேற்று, நெதர்லாந்தை அதன் சொந்தமண்ணில் எதிர்கொண்டது.
தனது 100வது போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் அபிஷேக், 20 வது நிமிடத்தில் 'பீல்டு' கோல் அடித்தார். 24 வது நிமிடம் நெதர்லாந்து அணியின் வான் டாம், தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார். 19 வது நிமிடத்தில் டிஜேப் ஒரு கோல் அடிக்க, முதல் பாதியில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின் தங்கியது.
இரண்டாவது பாதியில் 54 வது நிமிடத்தில் இந்தியாவுக்கு 'பெனால்டி கார்னர்' வாய்ப்பு கிடைத்தது. இதை ஜுக்ராஜ் சிங், கோலாக மாற்ற, ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. போட்டி முடிவதற்கு 3 நிமிடத்திற்கு முன், நெதர்லாந்து வீரர் ஜிப் ஜான்சென், ஒரு கோல் அடித்தார். முடிவில் இந்திய அணி 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
இதுவரை நடந்த போட்டிகளின் முடிவில் நெதர்லாந்து (20 புள்ளி), ஸ்பெயின் (18), இங்கிலாந்து (16) அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. இந்தியா (15) 4வது இடத்தில் (10ல் 5 வெற்றி, 5 தோல்வி) உள்ளது.