தி.மு.க., கூட்டணியில் இருந்து பல கட்சிகள் வெளியேறும்: அமைச்சர் முருகன்

14

நாமக்கல்: ''2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை முருக கடவுள் ஓட ஓட விரட்டுவார்,'' என, மத்திய இணை அமைச்சர் முருகன் தெரிவித்தார்.


நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, மத்திய இணை அமைச்சர் முருகன், நேற்று வந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி:



மத்தியில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, 12-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 2047-ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற நோக்கத்தில், பிரதமர் மோடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்; நம் நாடு வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

ஸ்டிக்கர் தி.மு.க.,



நாமக்கல் பகுதியில் இருக்கும் ரியல் எஸ்டேட் அதிபர்கள் பயன் பெறுவதற்காகவே, ஊருக்கு வெளியே பேருந்து நிலையத்தை கொண்டு சென்றுள்ளனர்.


தி.மு.க., என்றாலே, 'ஸ்டிக்கர்' தான்; ஸ்மார்ட் சிட்டி, ஜல் ஜீவன் திட்டம், ரேஷன் கார்டுதாரர்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ அரிசி என மத்திய அரசின் எல்லா திட்டங்களுக்கும் தி.மு.க., அரசு, தன்னுடைய ஸ்டிக்கர் ஒட்டி, ஏதோ தாங்களே கண்டுபிடித்து, செயல்படுத்தும் திட்டம் போல பெருமை பேசிக் கொள்கின்றனர்.



மதுரை திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலையாக மாற்றப் பார்க்கின்றனர். அது நடக்காது.


உலகெங்கிலும் இருக்கும் முருக பக்தர்களை கூட்டி, மதுரையில் மிக பிரமாண்டமான முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படவிருக்கிறது. அந்த மாநாட்டு வெற்றிக்குப் பின், ஹிந்துக்கள் ஒற்றுமை ஓங்கும்; எழுச்சி அதிகமாகும்.

தோல்வி பயம்



அந்த மாநாட்டுக்கு அனுமதி மறுப்பதன் வாயிலாக, மாநாட்டை நடத்த விடாமல் செய்து விடலாம் என தி.மு.க., அரசு திட்டம் போட்டு செயல்படுகிறது. இதற்கு, முருக கடவுளே சரியான பதிலடி கொடுப்பார். 2026ல் நடக்கும் தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வை முருக கடவுள் ஓட ஓட விரட்டப்போகிறார்.



தமிழகத்தில் அ.தி.மு.க., - -பா.ஜ., கூட்டணி வலிமையாக அமைந்த பின், தோல்வி பயத்தில், தி.மு.க.,வின் 'இண்டி' கூட்டணி உள்ளது. அந்த கூட்டணி நிலைத்தன்மை இல்லாமல் குழப்பத்தில் உள்ளது.


அதிலிருந்து பலர் வெளியே வருவார்கள்; பொறுத்திருந்து பாருங்கள். ஊழல் பெருச்சாளியான தி.மு.க., ஆட்சி அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement