அமெரிக்கா, பிரிட்டனில் பொறுப்பாளர்கள் த.வெ.க., தலைவர் விஜய் நியமித்தார்

சென்னை:: த.வெ.க., தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணி நிர்வாகிகளை, அக்கட்சி தலைவர் விஜய் நியமித்துள்ளார்.
தகவல் தொழில்நுட்ப அணி மாநில இணை ஒருங்கிணைப்பாளர்களாக, 8 பேர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை, வேலுார், சேலம், திருச்சி, கோவை, மதுரை, கடலுார், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி மண்டலங்களுக்கு, தலா ஒருவர் ஒருங்கிணைப்பாளராகவும், 10 பேர் இணை ஒருங்கிணைப்பாளர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
இதேபோல, சமூக ஊடக அணிக்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர்களாக நான்கு பேரும், சென்னை உட்பட பல்வேறு மண்டலங்களுக்கும் ஒருங்கிணைப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, மஹாராஷ்டிரா, டில்லி மாநிலங்களுக்கும், அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், மலேஷியா, இலங்கை மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.









