பேயர்ன் முனிக் கோல் மழை: கிளப் உலக கோப்பை கால்பந்தில்

சின்சினாட்டி: கிளப் உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் பேயர்ன் முனிக் அணி 10-0 என, ஆக்லாந்து சிட்டி அணியை வென்றது.

அமெரிக்காவில், கிளப் அணிகளுக்கு இடையிலான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது.
சின்சினாட்டியில் நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் பேயர்ன் முனிக் (ஜெர்மனி), ஆக்லாந்து சிட்டி (நியூசிலாந்து) அணிகள் மோதின. பேயர்ன் முனிக் அணி 10-0 என்ற கோல் கணக்கில் இமாலய வெற்றியை பதிவு செய்தது. பேயர்ன் முனிக் அணிக்கு ஜமால் முசியாலா 'ஹாட்ரிக்' கோல் (67, 73, 84வது நிமிடம்) அடித்து கைகொடுத்தார். கோமன் (6, 21வது), தாமஸ் முல்லர் (45, 89வது), மைக்கேல் ஒலிஸ் (20, 45+3வது) தலா 2, சாச்சா போய் (18வது) ஒரு கோல் அடித்தனர்.


பாரிஸ் அபாரம்: லாஸ் ஏஞ்சல்சில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (பிரான்ஸ்), அத்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்) அணிகள் மோதின. அபாரமாக ஆடிய பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணி 4-0 என வெற்றி பெற்றது. பாரிஸ் அணி சார்பில் பேபியன் ரூயிஸ் பெனா (19வது நிமிடம்), விடின்ஹா (45+1வது), சென்னி மயுலு (87வது), லீ காங்-இன் (90+7வது) தலா ஒரு கோல் அடித்தனர்.

Advertisement