இலங்கை பவுலர்கள் திணறல் * வங்கதேச அணி ரன் குவிப்பு

காலே: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் 2025-2027 சீசன் துவங்கியது. இதன் ஒரு பகுதியாக இலங்கை சென்றுள்ள வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் நேற்று காலேயில் துவங்கியது. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, பேட்டிங் தேர்வு செய்தார்.
வங்கதேச அணிக்கு ஷாத்மன் இஸ்லாம் (14), அனாமுல் ஹக் (0) மோமினுல் ஹக் (29) ஏமாற்ற, 45/3 ரன் என திணறியது.
சூப்பர் ஜோடி
பின் அனுபவ கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ, 'சீனியர்' முஷ்பிகுர் ரகிம் இணைந்து அணியை மீட்டனர். டெஸ்ட் அரங்கில் ஷாண்டோ, 6வது சதம் எட்டினார். முஷ்பிகுர், 12வது சதம் கடந்தார்.
முதல் நாள் ஆட்ட முடிவில் வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 292/3 ரன் எடுத்திருந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு 247 ரன் சேர்த்த ஷாண்டோ (136), முஷ்பிகுர் (105) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஓய்வு பெறும் மாத்யூஸ்
இலங்கை அணி 'ஆல் ரவுண்டர்' ஏஞ்சலோ மாத்யூஸ் 37. கடந்த 2009ல் அறிமுகம் ஆன இவர், 118 டெஸ்டில் 8167 ரன் எடுத்துள்ளார். கடந்த 2013-17ல் மூன்று வித இலங்கை அணிக்கு கேப்டனாக செயல்பட்டுள்ளார்.
காலேயில் நேற்று துவங்கிய முதல் போட்டியுடன், தனது 17 ஆண்டு டெஸ்ட் வாழ்க்கையில் இருந்து விடைபெற உள்ளார். நேற்று பீல்டிங் செய்ய களமிறங்கிய போது, இலங்கை வீரர்கள் மரியாதை செய்தனர். வங்கதேச அணியினரும் வாழ்த்து தெரிவித்தனர்.

Advertisement