புரோ லீக் ஹாக்கி: இந்தியா அபாரம்

ஆன்ட்வெர்ப்: புரோ லீக் போட்டியில் இந்திய அணி 4-3 என பெல்ஜியத்தை வீழ்த்தியது.


சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் 6வது சீசன் நடக்கிறது. ஆண்கள் பிரிவில் 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக பெல்ஜியம் சென்ற இந்திய அணி, தனது கடைசி போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது. இதில் இந்திய அணி 4-3 என 'திரில்' வெற்றி பெற்றது. இந்தியா சார்பில் சுக்ஜீத் சிங் 2, அமித் ரோஹிதாஸ், கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் தலா ஒரு கோல் அடித்தனர். இந்திய அணி 16 போட்டியில், 6 வெற்றி, 10 தோல்வி என 18 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது.

பெண்கள் பிரிவில் மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக பெல்ஜியம் சென்றுள்ள இந்திய பெண்கள் அணி, தனது 14வது போட்டியில் பெல்ஜியத்தை மீண்டும் சந்தித்தது. இதில் ஏமாற்றிய இந்திய அணி 0-2 என தோல்வியடைந்தது.

தொடர்ச்சியாக 6வது தோல்வியை பெற்ற இந்திய அணி, 2 வெற்றி, 3 'டிரா', 9 தோல்வி என 10 புள்ளிகளுடன் கடைசி இடமான 9வது இடத்துக்கு தள்ளப்பட்டது. அடுத்து ஜெர்மனி செல்லவுள்ள இந்திய அணி, சீனாவுக்கு எதிராக 2 போட்டியில் (ஜூன் 28, 29) விளையாடுகிறது.

Advertisement