தென் ஆப்ரிக்க அணி ஆதிக்கம்: 251 ரன்னுக்கு சுருண்டது ஜிம்பாப்வே

புலவாயோ: தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் தடுமாறிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன் எடுத்தது.
ஜிம்பாப்வே சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், புலவாயோவில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் தென் ஆப்ரிக்க அணி முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுக்கு 418 ரன் எடுத்து, 'டிக்ளேர்' செய்தது.


இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை துவக்கிய ஜிம்பாப்வே அணி, தென் ஆப்ரிக்க பந்துவீச்சில் தடுமாறியது. கோடி யூசுப் பந்தில் கைடானோ (0), நிக் வெல்ச் (4) அவுட்டாகினர். கேப்டன் கேஷவ் மஹாராஜ் 'சுழலில்' ஜிம்பாப்வே கேப்டன் கிரெய்க் எர்வின் (36) சிக்கினார். வியான் முல்டர் 'வேகத்தில்' வெஸ்லி மாதேவெரே (15), பிரின்ஸ் (7), டிசிகா (9) வெளியேறினர்.
விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் மறுமுனையில் அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய சீன் வில்லியம்ஸ், டெஸ்ட் அரங்கில் தனது 6வது சதத்தை பதிவு செய்தார். மஹாராஜ் பந்தில் வில்லியம்ஸ் (137) அவுட்டானார். ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 251 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. மசேகேசா (11) அவுட்டாகாமல் இருந்தார். தென் ஆப்ரிக்கா சார்பில் முல்டர் 4, மஹாராஜ், யூசுப் தலா 3 விக்கெட் சாய்த்தனர்.


பின், 167 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை துவக்கிய தென் ஆப்ரிக்க அணி 49/1 ரன் எடுத்திருந்த போது, வெளிச்சமின்மையால் 2ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. ஜோர்ஜி (22), முல்டர் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

6 சதம்
டெஸ்ட் அரங்கில் அதிக சதம் விளாசிய ஜிம்பாப்வே வீரர்கள் வரிசையில் 2வது இடத்தை கிராண்ட் பிளவர், பிரண்டன் டெய்லருடன் பகிர்ந்து கொண்டார் சீன் வில்லியம்ஸ். மூவரும் தலா 6 சதம் அடித்தனர். முதலிடத்தில் ஆன்டி பிளவர் (12 சதம்) உள்ளார்.

200 விக்கெட்
ஜிம்பாப்வேயின் எர்வினை அவுட்டாக்கிய கேஷவ் மஹாராஜ், டெஸ்ட் அரங்கில் 200 விக்கெட் சாய்த்த முதல் தென் ஆப்ரிக்க சுழற்பந்துவீச்சாளரானார். இவர், 59 டெஸ்டில் இம்மைல்கல்லை எட்டினார்.

Advertisement