பயன்பாட்டிற்கு வந்தது ராயபுரம் மாட்டு கொட்டகை

ராயபுரம், நம் நாளிதழ் சுட்டிக்காட்டியதை அடுத்து, ஒரு மாதமாக செயல்பாட்டுக்கு வராமல் இருந்த, ராயபுரம் மாட்டு கொட்டகை நேற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சென்னை மாநகராட்சி சார்பில், 15 இடங்களில் மாட்டு கொட்டகைகள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

முதற்கட்டமாக, ராயபுரம் பேசின்பாலம் சாலையில், 7,700 சதுர அடியில், 1.30 கோடி ரூபாய் செலவில், 250 மாடுகளை பராமரிக்கும் வகையில் மாட்டு கொட்டகை அமைக்கப்பட்டது.

ஒரு மாதத்திற்கு முன், முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக மாட்டு கொட்டகையை திறந்து வைத்தார்.

ஒரு மாட்டிற்கு நாள் ஒன்றிற்கு, 10 ரூபாய் என, மாட்டு உரிமையாளர்களிடம் மாதம் 300 ரூபாய் வசூலிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்த தொகையை தர, மாட்டு உரிமையாளர்கள் முன் வராததால், மாட்டு கொட்டகை பயன்பாடின்றி மூடியே கிடந்தது.

இதுகுறித்து, கடந்த 28ம் தேதி, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியானது.

இதையடுத்து, மாட்டு உரிமையாளர்களுடன் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு நடத்தி, மாட்டு கொட்டகையை நேற்று பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். மாட்டு உரிமையாளர்களும் தங்கள் மாடுகளை கொட்டகையில் கட்டினர்.

பயன்பாட்டுக்கு வந்த மாட்டு கொட்டகையை அமைச்சர் சேகர்பாபு நேற்று ஆய்வு செய்தார். கால்நடைஉரிமையாளர்களுக்கு பால் பாத்திரங்கள், பசுமாடுகளுக்கான பசுங்கீரைகள் மற்றும் உணவு தீவனங்களை வழங்கினார்.

மேலும், கூடுதலாக கால்நடைகளை பராமரிக்கும் வகையில், காப்பத்தை விரிவுபடுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும்; கூடுதல் கண்காணிப்புடன் பராமரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஆய்வின்போது, சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன், வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா, எம்.எல்.ஏ.,க்கள் ஐட்ரீம் மூர்த்தி, ஆர்.டி.சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Advertisement