பல்லவர் கால மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிப்பு

விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே கோவடி கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முரளி தகவலில், வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் உள்ளிட்ட குழுவினர், அக்கிராமத்தில் கள ஆய்வு செய்த போது, பல்லவர் காலத்தைச் சேர்ந்த மூத்ததேவி சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.

வரலாற்று ஆய்வாளர் செங்குட்டுவன் கூறியதாவது:

வயல்வெளிக்குள், மண்ணுக்குள் புதைந்திருந்த சிற்பத்தை சமீபத்தில் கண்டறிந்த மக்கள், அதை துர்க்கை என வழிபட்டு வந்தனர். மண்ணை அகற்றி வெளியே எடுத்து பார்த்தபோது, ௩ அடி உயர மூத்ததேவி சிற்பம் என தெரிந்தது. எளிய தலை அலங்காரம், ஆடை அலங்காரத்துடன் உள்ளது. இரு கால்களை தொங்கவிட்டு, இரண்டு கரங்களை தொடை மீது வைத்த நிலையில் சிற்பம் வடிக்கப்பட்டுள்ளது. மூத்ததேவி சிற்பங்களில் இடம்பெறும் காக்கை கொடி இல்லை.

வழக்கமாக மகன் மாந்தன், மகள் மாந்தி இருவரும் மூத்ததேவிக்கு அருகில் இருப்பர். இச்சிற்பத்தில் இடுப்புக்கு கீழே காட்டப்பட்டுள்ளது, வித்தியாசமான அமைப்பு. பல்லவர் கலை அம்சத்துடன் காணப்படும் இந்த சிற்பம் கி.பி., 7-8ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement