அதிகாரிகள் ராஜினாமாவால் கர்நாடகா வங்கி பங்கு சரிவு

பெங்களூரு : கர்நாடகா வங்கியின் நிர்வாக இயக்குநர் சேகர் ராவ், தலைமை நிர்வாக அதிகாரி ஸ்ரீகிருஷ்ணன் ஹரிஹர சர்மா ஆகிய இருவரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர்.

இருவரும் கடந்த மாதம் 29ம் தேதி ராஜினாமா கடிதங்கள் கொடுத்தனர். இதை வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொண்டு உள்ளது. இது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வங்கியின் உயர் பதவியில் இருக்கும் முக்கியமான அதிகாரிகள் இருவர் ராஜினாமா செய்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வங்கியின் இயக்குநர் வாரியத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு தான் காரணம் என தகவல் வெளியானது. இந்த பதவி விலகல், பங்குச் சந்தையிலும் எதிரொலித்தது.

இதன் காரணமாக, பங்குச் சந்தையில் நேற்று கர்நாடக வங்கியின் பங்குகளின் விலை, வர்த்தகத்தின் இடையே எட்டு சதவீதம் வரை குறைந்தது. பின்னர், 5,75 சதவீத வீழ்ச்சியுடன் நிறைவடைந்தது.

இதனால், உஷாரான வங்கி நிர்வாகம், உயரதிகாரிகள் ராஜினாமா குறித்து விளக்கம் அளித்துள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காகவே இருவரும் ராஜினாமா செய்ததாகவும், ராஜினாமா செய்த அதிகாரிகளின் இடங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமிக்கும் பணி நடைபெறுவதாகவும் தெரிவித்து உள்ளது.

Advertisement