சாலை நடுவே மரங்களை வெட்டாமல் ரூ.100 கோடிக்கு ரோடு போட்ட அரசு

4

பாட்னா : பீஹாரில் சாலை நடுவே உள்ள மரங்களை வெட்டாமல், 100 கோடி ரூபாய் செலவு செய்து புதிய சாலை அமைத்திருப்பது, பொதுமக்கள் உயிருக்கு அச்சுறுத்தலாக உள்ளது.

பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, தலைநகர் பாட்னாவில் இருந்து 50 கி.மீ., தொலைவில் உள்ள ஜெஹனாபாதில் சாலை விரிவாக்கப் பணி சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது.

பாட்னா - கயாவை இணைக்கும் 7.48 கி.மீ., நீளமுள்ள இந்த சாலை, சமீபத்தில் 100 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்யப்பட்டது. புத்தம் புது தார் சாலையாக இது பளபளத்தாலும், அதை பயன்படுத்த மக்கள் தயங்குகின்றனர்.

சாலையின் நடுவே வானுயர வளர்ந்து நிற்கும் மரங்களை அகற்றாமல் சாலை போடப்பட்டதே அதற்கு காரணம். ஏன் இப்படி செய்தனர் என கேட்டால், அதற்கு பின் ஓர் கதை உள்ளது.

இங்கு, 100 கோடி ரூபாய் செலவில் சாலை விரிவாக்கம் செய்ய முடிவெடுத்த ஜெஹனாபாத் மாவட்ட நிர்வாகம், சாலை நடுவே மற்றும் சாலையோரம் உள்ள மரங்களை வெட்ட வனத்துறையிடம் அனுமதி கோரியதாக கூறப்படுகிறது.

இதற்கு மறுப்பு தெரிவித்த வனத்துறை, அப்படி அகற்ற வேண்டுமானால், 35 ஏக்கர் நிலத்தை இழப்பீடாக கேட்டதாக சொல்லப்படுகிறது.

இதனால் செய்வதறியாது திகைத்த மாவட்ட நிர்வாகம், மரங்களை வெட்டாமல், மீதமுள்ள பகுதிகளில் சாலை பணிகளை மேற்கொண்டுள்ளது. இதனால், சாலை நடுவே பிரமாண்ட மரங்கள் நிற்கின்றன.

மொத்தம், 100 கோடி ரூபாய் செலவு செய்தும், சாலையை பயன்படுத்த முடியாத நிலையே உள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் சென்றால் விபத்து ஏற்படுவது நிச்சயம். மாவட்ட நிர்வாகம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Advertisement