கோவையில் செம்மொழி பூங்கா பணிகள் தாமதம்: தமிழக அரசின் முதன்மை செயலர் நேரில் ஆய்வு

1

கோவை: கோவையில், செம்மொழி பூங்கா வேலைகள், ஏற்கனவே அறிவித்தபடி ஜூன் மாதத்துக்குள் முடியாததால், தமிழக அரசின் முதன்மை செயலர் ராஜேந்திர ரத்னு, நேற்று நேரில் ஆய்வு செய்தார். அப்போது, அக்., 15க்குள் பணியை முடிப்பதாக, மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.

கோவை காந்திபுரத்தில், முதல்கட்டமாக, 45 ஏக்கரில், செம்மொழி பூங்கா உருவாக்கப்படுகிறது. 2023 டிச., 18ல் தமிழக முதல்வர் ஸ்டாலின், அடிக்கல் நட்டார்.

2024 அக்., 6ல் கோவையில் நடந்த, 'கள ஆய்வில் முதல்வர்' நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர், '2025 ஜூன் மாதம் செம்மொழி பூங்கா பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்' என அறிவித்தார். ஆனால், திட்டமிட்டபடி, பணிகள் முடியவில்லை. மாநகராட்சி தரப்பில் அவகாசம் கோரப்பட்டது.

அதிகாரி ஆய்வு



தமிழக அரசின் முதன்மை செயலாளர் ராஜேந்திர ரத்னு, செம்மொழி பூங்காவில் நேற்று நேரில் ஆய்வு செய்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், ஒவ்வொரு பணிகளையும் விளக்கினார். சிறைத்துறை வளாகத்தில் உள்ள பழமையான இரு கட்டடங்களை பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும்; பொதுப்பணித்துறை வாயிலாக, புராதன கட்டட பணி மேற்கொள்ளக் கூடியவர்களை வரவழைத்து மேம்படுத்த வேண்டும் என அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் அனைத்து துறைகளின் சேவைகளை, 'ஜியோ டேக்' முறையில் ஒரே இடத்தில் பெறுவதற்கான வசதியை ஏற்படுத்தவும், யோசனை தெரிவித்தார்.

பின், 'பயோ செப்டிக்' டேங்க் செயல்படும் விதம், கழிப்பறை வசதி, மரக்கன்றுகள் தருவிப்பதை கேட்டறிந்தார். 'மியாவாக்கி' முறையில் அடர்ந்த வனம் போல், ஓரிடத்தில் மரக்கன்றுகள் நட அறிவுறுத்தினார். திட்டமிட்டபடி, பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்திய செயலர், 'நுழைவாயில் பகுதியில் நெரிசல் தவிர்க்க, விசாலமான இட வசதி இருக்க வேண்டும் என, அறிவுரை வழங்கினார்.

@block_B@

தற்போதைக்கு இல்லை

சில மாதங்களுக்கு முன், முதல்வர் கோவை வந்திருந்தபோது, 'குழந்தைகளை ஈர்க்கும் வகையில், ராட்டினம் போன்ற வசதிகளை செய்ய, ஆலோசனை வழங்கினார். அதனால், ஜெயின்ட் வீல் ராட்டினம், ஜிப் லைன் வசதியை, தனியார் பங்களிப்புடன் அமைக்க திட்டமிடப்பட்டது. தற்போது டெண்டர் கோரி, ஒப்பந்த நிறுவனத்தை இறுதி செய்ய முடிவு எடுத்திருப்பதால், திறப்பு விழாவுக்குள் அமைக்க வாய்ப்பில்லை; அதன்பின், அமைக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.block_B

Advertisement