சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய புகார் :எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்'

கூடலுார்:
கூடலுாரில் சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கிய எஸ்.எஸ்.ஐ., உட்பட இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களுக்கு, கூடலுார் வழியாக வெளி மாநில சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இவர்களின் வாகனங்களை போலீசார் சோதனை செய்து, விதிமீறல்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர்.இந்நிலையில், சுற்றுலா பயணி ஒருவரிடம், பணியில் இருந்த எஸ்.எஸ்.ஐ., ஒருவர் லஞ்சம் வாங்குவது தொடர்பான, 'வீடியோ' கடந்த வாரம் வெளியாகி வைரல் ஆனது.

அதன் அடிப்படையில், நீலகிரி எஸ்.பி., உத்தரவின் பேரில் விசாரணை நடந்தது. அதில், 'கூடலுாரில் 'ஹைவே' ரோந்து பணியில் ஈடுபட்ட, எஸ்.எஸ்.ஐ., சுலைமான் சுற்றுலா பயணியிடம் லஞ்சம் வாங்கினார்,' என, உறுதி செய்யப்பட்டது. அவர், ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

தொடர் விசாரணைக்கு பின், எஸ்.எஸ்.ஐ., சுலைமான், வாகனம் ஓட்டிய போலீஸ் வினோத் ஆகியோரை, நீலகிரி மாவட்ட எஸ்.பி., நிஷா 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement