மேற்கு மண்டல தபால் துறையில் 9 இடங்களில் ஐ.டி.சி., மையம்

கோவை: கோவையை தலைமையிடமாகக் கொண்ட, மேற்கு மண்டல தபால் துறையில், ஒன்பது இடங்களில், மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவை (ஐ.டி.சி.,) மையம் துவங்கப்பட்டுள்ளது.

தபால் நிலையத்தில் உள்ள பீட்களை, ஆங்காங்கே ஒரே அலுவலகத்தில் இணைத்து, மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவை (independent delivery center), தபால் துறை சார்பில் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு தபால் நிலையத்தில், ஒன்றுக்கும் மேற்பட்ட தபால் நிலையங்களில் உள்ள பட்டுவாடா சேவை மையம் இணைக்கப்படுகிறது.

கோவையை தலைமையிடமாகக் கொண்ட மேற்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், நீலகிரி, தர்மபுரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், திருப்பத்துார் ஆகிய மாவட்டங்கள் அடங்கியுள்ளன.

இதில், கோவை ராம் நகர், கோவை மத்திய அஞ்சலகம், திருப்பூர் மாவட்டம் அவிநாசி, ஈரோடு தலைமை அஞ்சலகம், தர்மபுரி தலைமை அஞ்சலகம், சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, திருப்பத்துார் மாவட்டத்தில் குடியாத்தம், கிருஷ்ணகிரி

ஆகிய தபால் நிலையங்களில், மையப்படுத்தப்பட்ட பட்டுவாடா சேவை மையங்கள் துவங்கப்பட்டுள்ளன.

ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட, பட்டுவாடா சேவை மையங்கள் இணைக்கப்பட்டு, ஐ.டி.சி., மையமாக செயல்பட உள்ளது. ஐ.டி.சி., மையங்களுக்கு சாதாரண தபால் மட்டுமல்லாமல், பார்சல், விரைவு தபால்களும், இங்கிருந்து வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவையை பொறுத்தவரை, பாப்பநாயக்கன்பாளையம் பட்டுவாடா சேவை மையம், ரயில் நிலையத்தில் உள்ள மத்திய அஞ்சலகத்துக்கும், டாடாபாத், சித்தாபுதுார் பட்டுவாடா சேவை மையங்கள், ராம்நகர் தபால் நிலையத்துக்கும் கொண்டு வரப்பட்டுள்ளது.

ராம்நகர் தபால் நிலையத்தில், நேற்று நடந்த ஐ.டி.சி., துவக்க நிகழ்ச்சியில், ஆர்.எம்.எஸ்., கோவை கோட்ட கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு, கோவை தலைமை தபால் நிலைய சீனியர் போஸ்ட் மாஸ்டர் காசி விஸ்வநாதன், அஞ்சல் உதவி கோட்ட கண்காணிப்பாளர் பாலாஜி, பாலமுருகன், ராம்நகர் போஸ்ட் மாஸ்டர் ஸ்டான்லி நவராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement