வாய் கோமாரி தடுப்பூசி முகாம் நாளை... துவக்கம்; 3 லட்சம் கால்நடைகளுக்கு செலுத்த இலக்கு

கடலுார்: கடலுார் மாவட்டம் முழுதும் கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நாளை முதல் வரும் 22ம் தேதி வரை நடக்கிறது.


தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கடலுார் மாவட்டத்தில் 2025ம் ஆண்டில் நாளை 2ம் தேதி முதல் வரும் 22ம் தேதி வரை 7வது சுற்று கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


கால் மற்றும் வாய் கோமாரி நோயானது கலப்பின மாடுகளை அதிகம் தாக்கி கால்நடை வளர்ப்போருக்கு பொருளாதாரம் மற்றும் உற்பத்தி இழப்பை ஏற்படுத்துகிறது. இந்நோயினால் இறப்புகள் குறைவாக இருந்த போதிலும், கறவை மாடுகளில் பால் உற்பத்தி, எருதுகளின் வேலைத் திறன் குறைவு ஏறபடுகிறது. கறவை மாடுகளில் சினை பிடிப்பு தடைபடுகிறது.



இளங்கன்றுகளில் இறப்பு போன்ற பாதிப்புகளினால் ஏற்படும் பொருளாதார இழப்பு அதிகம். மேலும் இந்நோய் பொதுவாக குளிர் மற்றும் பனிக்காலம், நோய் பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வாங்கி வரப்பட்ட கால்நடைகள், சுகாதாரமற்ற கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடைகளுக்கு தடுப்பூசி போடாமல் இருத்தல் ஆகிய காரணங்களால் விரைவாக காற்றின் மூலம் பரவும் தன்மை கொண்டது.


இந்நோய் பாதிக்கப்பட்ட மாடுகளின் சிறுநீர், பால், உமிழ்நீர், சாணம் ஆகியவற்றால் மற்ற கால்நடைகளுக்கு பரவுகிறது. இந்நோய் கால்நடைகளுக்கு ஏற்படாமல் இருக்க தடுப்பூசி பணி மேற்கொள்ள செயல் திட்டம் தீட்டி ஆண்டுக்கு இருமுறை ஜூலை மாதத்தில் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுகுறித்து கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறுகையில், 'கடலுார் மாவட்டத்தில் கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கால் மற்றும் வாய் கோமாரி நோய் தடுப்பூசி 6 சுற்றுகள் முடிவடைந்து விட்டது.


தற்போது, 7வது சுற்றாக கடலுார், சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய கோட்டங்களில் உள்ள 3லட்சம் கால்நடைகளுக்கு தடுப்பூசி பணி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 83 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.


விவசாயிகள் இந்த முகாமை பயன்படுத்திக் கொண்டு கோமாரி நோயிடமிருந்து கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்' என்றார்

Advertisement