டிரெண்ட் மாறியதால் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம்: அமைச்சர் துரைமுருகன்

48

சென்னை: டிரெண்ட் மாறியதால் ஓரணியில் தமிழ்நாடு என்ற பிரசாரம் மூலம் மக்களை வீடு, வீடாக சென்று சந்திக்க உள்ளோம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறி உள்ளார்.



தி.மு.க., சார்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற 45 நாள் பிரசாரத்தை அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் இன்று (ஜூலை 1) சென்னையில் தொடங்கி வைத்தார். அதற்கான வீடியோவை அவர் வெளியிட்டார்.


தொலைக்காட்சி வழியாக வேலூரில் இருந்தபடி பிரசாரம் தொடக்க விழாவை அமைச்சர் துரைமுருகன் பார்த்தார். பின்னர், பிரசாரத்தை தொடங்கி வைத்த அவர், நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது;


ஓரணியில் தமிழ்நாடு என்ற புதிய சித்தாந்தத்தை முதல்வர் அறிவித்து இருக்கிறார். இந்த தலைப்பு பல்வேறு கோணங்களை உள்ளடக்கி இருக்கிறது. முதலில், பிரிந்திருக்கின்ற அல்லது ஒத்த கருத்துடையவர்கள் யார், யார் இருக்கிறார்களோ அவர்களை எல்லாம் சந்தித்து கொள்கை விளக்கங்களை தெரிவித்து இந்த அணியிலே சேர்க்க வேண்டும் என்பது இந்த தத்துவத்தின் முதல் பாகம்.


அதோடு மட்டும் அல்லாமல் ஏதோ ஒரு 4 பேரை கேட்டேன், 3 பேர் வர்றேன், ஒருவர் வரவில்லை என்று சொல்லிவிட்டு எழுதிவிட முடியாது. மற்றவர்களை கட்சியில் சேர்க்கிற போது, அவர்களிடம் வெறும் தி.மு.க., கோட்பாடுகளை மட்டும் சொன்னால் எடுபடாது.


ஆனால், தி.மு.க., வெறும் அரசியல் கட்சி அல்ல, அது ஒரு சமுதாய போராளி கட்சி. தமிழகத்தின் இனம்,மானம்,.மொழி, மரியாதை இவைகளை எல்லாம் கட்டிக்காக்கின்ற கட்சி. தமிழகம் யாருக்கும் இரண்டாம்தர மாநிலமாக போய்விடக்கூடாது என்பதில் அதிக அக்கறை உள்ள கட்சி.


ஆகையினால் மற்றவர்களை சந்திக்கும் போது, மொழி, மானம் காக்கிற பணியை நாங்கள் செய்கிறோம் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும் என்பது முதல்வரின் கருத்திலே ஒன்று. ஒவ்வொரு குடும்பத்திலும் பிரசாரங்கள் இன்று மாறி போயிருக்கிறது. கொஞ்ச காலம் முன்பு ஒரு பொதுக்கூட்டம் என்று சொன்னால் ஆண்கள், பெண்கள் அடுக்கடுக்காக உட்கார்ந்து ஒரு பெருங்கூட்டத்தை 3 மணி நேரம் ரசிப்பார்கள்.


ஆனால் இன்றைக்கு அந்த மாதிரி டிரெண்ட் கிடையாது. எதையும் டிவியில் பார்த்துவிட்டு போய்விடலாம் என்ற நிலை இருக்கிறது. முன்பு எல்லாம் மைக் வைத்து பேசுவோம். ஆனால் இன்றெல்லாம் அப்படி அல்ல.


நேரிடையாக அந்தந்த குடும்பங்களை சந்தித்து, இந்த ஆட்சியின் நிலைமை, இந்த ஆட்சி 4 ஆண்டுகாலங்களில் என்னென்ன செய்திருக்கிறது என்பதை எடுத்துச் சொல்லி, எங்களின் ஆட்சியை கவிழ்க்க வேண்டும் என்பதற்காக அல்லது வருகிற தேர்தலில் தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக என்னென்ன வழிமுறைகளை எல்லாம் மாற்றுக் கட்சியினர் ஆதரிக்கின்றனர் என்பதை தனித்தனியாக எடுத்துச் சொல்ல வேண்டும்.


பொதுக்கூட்டத்தில் கேட்டால் பத்தோடு பதினொன்றாக போய் விடும். தனிமனிதனிடம் 5 நிமிடம், 10 நிமிடம் பேசினால் அவர்களுக்கு இந்த கட்சியின் மீது அதிக நாட்டம் ஏற்படும். எனவே வீடு, வீடாக போக வேண்டும் என்று தெரிவிக்கிறோம்.


மத்திய அரசானது, தமிழகத்திற்கு தரவேண்டிய மாநில நிதியை தராமல் அதற்கு எதிர்வினையாகவே செய்கிறது. கீழடி உங்களுக்கு தெரியும், அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. மத்திய சர்க்காருக்கு தமிழகம் மீது எவ்வளவு வெறுப்பு இருக்கிறது.


இவற்றை எல்லாம் எதிர்க்க வேண்டும் என்றால் பிரிந்திருந்தால் நடக்காது,இணைந்து இருந்தால் தான் நடக்கும். அதனால் தான் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் அறிவித்து இருக்கிறார்.


இவ்வாறு துரைமுருகன் பேசினார்.


அதன் பின்னர் நிருபர்களின் கேள்விகளுக்கு துரைமுருகன் பதிலளித்தார். அவர் பேசியதாவது;


தமிழகத்தை காப்போம் என்று அ.தி.மு.க.,வின் பிரசாரத்தை பற்றி நாங்கள் என்ன சொல்வது? எதிர்க்கட்சியாக இருக்கிறவன், ஆளுங்கட்சியை பார்த்து எல்லாம் பிரமாதமாக இருக்கு? நல்லா இருக்கு என்றெல்லாம் சொல்வானா? நல்லாயிருந்தால் கூட நல்லாயில்லை என்றுதான் சொல்வான்.


வீடு, வீடாக சென்று மக்களை சந்திக்கும் போது அவர்கள் சொல்லும் குறைகளை கேட்போம்.


இவ்வாறு துரைமுருகன் பதிலளித்தார்.

Advertisement