மக்காச்சோளம் சாகுபடிக்கு வழிகாட்டுதல்... தேவை; வேளாண்மைத்துறை கவனம் செலுத்துமா?

தியாகதுருகம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி அதிகரித்து வரும் நிலையில் விவசாயிகளுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி மேலும் மகசூலைப் பெருக்க வேளாண் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விவசாயம் பிரதான தொழிலாக உள்ளது. இதில், நெல் மற்றும் கரும்பு அதிக பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தபடியாக மானாவாரி மற்றும் இறவையில் மக்காச்சோளம் பயிரிடப்படுவது அதிகரித்து வருகிறது.

கால்நடை, கோழித் தீவனம், மதிப்பூட்டப்பட்ட உணவு வகை, எத்தனால் உற்பத்தி ஆகியவற்றிற்கு மக்காச்சோளம் முக்கிய மூலப் பொருளாக அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக கடந்த 3 ஆண்டுகளில் மாவட்டத்தில் இதன் சாகுபடி பரப்பு பன்மடங்கு அதிகரித்துள்ளது. வழக்கமாக மானாவாரி நிலங்களில் பருத்தி, உளுந்து ஆகிய பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டு வந்தது.

இவை அறுவடை காலங்களில் கனமழை பெய்தும் அல்லது போதிய மழை பெய்யாமலும் ஏமாற்றும் நேரங்களில் மகசூல் பாதிக்கப்பட்டு கடும் நஷ்டம் ஏற்படுகிறது.

இதனால் விவசாயிகள் மாற்றுப் பயிராக மக்காச்சோளத்திற்கு மாறினர். இது எதிர்பார்த்ததை விட அதிக மகசூல் கிடைத்து கூடுதல் லாபம் ஈட்டிக் கொடுத்ததால் ஆண்டுதோறும் இதன் சாகுபடி பரப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.

இயற்கையாகவே மக்காச்சோளம் சாகுபடி செய்வதற்கு ஏற்ற மண் வளம் மற்றும் பருவநிலை இங்கு சாதகமாக உள்ளதால் கூடுதல் மகசூல் கிடைக்கிறது. விவசாயிகளுக்கு போதிய வழிகாட்டுதலும், தேவையான ஆலோசனைகளும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை.

ஒவ்வொரு முறையும் பயிரிடும் போது கிடைக்கும் அனுபவத்தைக் கொண்டு மகசூலைப் பெருக்க விவசாயிகள் போராடி வருகின்றனர். குறிப்பாக பயிர் வளரும் பருவத்தில் குறுத்து ஈ தாக்குதல் மற்றும் கதிர் உருவாகும் தருணத்தில் இலைகளில் படைப்புழு தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

இதற்கு தேவையான பூச்சி மருந்து மற்றும் உரங்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு கிடைத்திட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது அறுவடை இயந்திரம் புழக்கத்திற்கு வந்துள்ளது. இது குறைந்த எண்ணிக்கையில் உள்ளதால் விளைந்த கதிர்களை குறித்த நேரத்தில் அறுவடை செய்ய முடியாத நிலை உள்ளது.

அதேபோல் அறுவடை செய்த மக்காச்சோள மணிகளை உலர்த்துவதற்கு உலர்களம் இன்றி சாலைகளில் பரப்பி உலர்த்த வேண்டிய வேண்டிய நிலை உள்ளது.

வீரிய ஒட்டுரக மக்காச்சோள விதைகள், திரவ உயிர் உரங்கள், இயற்கை உரம், நானோ யூரியா ஆகியவற்றை உள்ளடக்கிய 6,000 ரூபாய் மதிப்பிலான தொகுப்பு விவசாயிகளுக்கு வழங்கப்படும் என கடந்த 2024ம் ஆண்டு பட்ஜெட்டில் வேளாண் துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார். ஆனால், இவை மாவட்டத்தில் மக்காச்சோளம் பயிரிடும் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்கவில்லை.

தமிழகத்தில் ஆண்டுக்கு 50 லட்சம் டன் மக்காச்சோளம் தேவை உள்ள நிலையில் 30 லட்சம் டன் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. தேவையை கருத்தில் கொண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டியது வேளாண்துறை அதிகாரிகளின் முக்கிய கடமையாகும்.

மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்ய போதிய விளைநிலங்கள் உள்ளதாலும், குறைந்த தண்ணீரைக் கொண்டு இப்பயிர் வளர்ந்து நல்ல மகசூலை தரும் என்பதாலும் இதனை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு வேளாண் துறை அதிகாரிகள் உதவ வேண்டும்.

இதற்காக அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள், சலுகைகள் முழுமையாக மக்காச்சோள சாகுபடி விவசாயிகளுக்கு கிடைத்திட அதிகாரிகள் வழிவகை செய்திட வேண்டும்.

Advertisement