ஹைதராபாத் ரசாயன தொழிற்சாலை தீ விபத்து: பலி 37 ஆக உயர்வு; மேலும் அதிகரிக்க வாய்ப்பு

1


ஹைதராபாத்: தெலுங்கானாவில், ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது. 2வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.

தெலுங்கானாவில் சங்கரெட்டி மாவட்டத்தின் பதஞ்சேரு பகுதியில் பாஷ்மிலராம் தொழிற்பேட்டை உள்ளது. இங்கு, ஷிகாச்சி ரசாயன தொழிற்சாலை இயங்கி வருகிறது.


இதில், 150க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று பணியில் இருந்தனர். அப்போது தொழிற்சாலையில் இருந்த உலை ஒன்று பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் பதறியபடி வெளியேறினர். எனினும், உலையின் அருகே இருந்த தொழிலாளர்கள் இந்த விபத்தில் சிக்கியது தெரிய வந்தது. தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்பு மற்றும் மீட்புக்குழு உதவியுடன் உள்ளே இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.



தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயை நீண்டநேரம் போராடி, தீயணைப்புப் படையினர் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து, உள்ளே சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டனர். இந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.


10க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. 2வது நாளாக தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது.


இந்த வெடிவிபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்திற்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement