கிறிஸ்தவ மத துண்டு பிரசுரங்கள் வழங்கி அரசு மருத்துவமனையில் அத்துமீறல்

39


துாத்துக்குடி: அரசு மருத்துவமனைக்குள், நோயாளிகளுக்கு கிறிஸ்தவ மத துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 200க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், மருத்துவமனை வளாகத்திலும், உள்நோயாளிகளிடமும் சிலர் மத பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.



இந்நிலையில், பெண் நோயாளிகள் பிரிவில் செவிலியர்கள் பணியில் இருக்கும்போதே இரு நபர்கள் கிறிஸ்தவ மதம் தொடர்பான வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


அவர்களிடம், 'என்ன புத்தகம் கொடுக்கிறீர்கள்' என கேள்வி எழுப்பும் நபரிடம், 'ஆண்டவர் இயேசு சுகம் கொடுக்கும் வாசகங்கள் இடம் பெற்ற புத்தகத்தை வழங்குகிறோம்' என தெரிவித்தார். 'கொடுத்த புத்தகங்களை திரும்ப வாங்குங்கள்' என, சிலர் எதிர்ப்பு தெரிவித்ததும், அவர்கள் அங்கிருந்து நைசாக நழுவி சென்றனர்.


அரசு மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்து நோயாளிகளிடம் துண்டு பிரசுங்களை வினியோகம் செய்தவர்கள் மீதும், அவர்களை அனுமதித்த டாக்டர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து அமைப்புகளும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement