'மாநகராட்சி வரி முறைகேடு தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழல்'

4

சென்னை: 'மதுரை மாநகராட்சியில் நடந்த வரி முறைகேடு, தி.மு.க.,வின் விஞ்ஞான ஊழலை நினைவூட்டுகிறது' என அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

மதுரை மாநகராட்சியில் விதிகளை மீறிய வரி குறைப்பு முறைகேடு வாயிலாக, 200 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக அதிகாரிகள் உட்பட எட்டு பேர் கைதாகி உள்ளனர்.

ஆயிரக்கணக்கான கட்டடங்களுக்கு, கடந்த மூன்று ஆண்டுகளாக சட்ட விரோதமாக வரி குறைப்பு செய்ததில், அதிகாரிகள், மண்டல தலைவர்கள், கவுன்சிலர்களுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

வரி விதிப்புக்கு அனுமதி அளிக்கும் மாநகராட்சி அதிகாரிகளின், 'கடவுச் சொற்கள்' முறைகேடாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

ஆன்லைன் வழியே மட்டுமே வரி விதிப்பு நடக்கும் சூழ்நிலையில், தற்போது நிகழ்ந்துள்ள இந்த முறைகேடானது, தி.மு.க.,வின் அடிப்படை குணமான, விஞ்ஞான ஊழலை மீண்டும் நினைவுபடுத்துகிறது.

மதுரை மாநகராட்சியில் வரி குறைப்பு முறைகேட்டில் கைதானவர்களிடம் விரிவான விசாரணை நடத்தி, தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும். மேலும், மற்ற மாநகராட்சிகளிலும் இது போன்ற முறைகேடு நடந்திருக்கிறதா என்பதை, தமிழக அரசு ஆய்வு செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement