ரூ.20 லட்சம் மோசடி வழக்கு தலைமறைவு தம்பதி கைது

சென்னை, வங்கிகளில் 20.75 லட்சம் ரூபாய் கடன் பெற்று, இரண்டு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த மோசடி தம்பதியை, போலீசார் கைது செய்தனர்.

அண்ணாநகரைச் சேர்ந்த சுவாமிதாஸ் பாண்டியன், 62. இவரது மனைவி மேரி ஜாக்குலின், 59, இருவரும், எஸ்.பி.ஐ., மற்றும் ஐ.ஓ.பி., வங்கிகளில், 20.75 லட்சம் கடன் பெற்று, திருப்பி செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த மத்திய குற்றப்பிரிவு வங்கி மோசடி புலனாய்வு பிரிவு போலீசார், மோசடியில் ஈடுபட்ட தம்பதியை கைது செய்தனர்.

பின் ஜாமினில் வெளியே வந்த இருவரும் தொடர்ந்து நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகினர். இதையடுத்து, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், இருவருக்கும் பிடியாணை பிறப்பித்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமறைவான தம்பதியை நேற்று முன்தினம், திருவள்ளூர் மாவட்டம், சூரப்பட்டில் வைத்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

பின் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மீண்டும் சிறையில் அடைத்தனர்.

Advertisement