ஏரிகளை துார்வார தனியார் ஒதுக்கிய நிதிக்கு...அரசு 'லேபிள்'பணியும் துவங்காததால் சமூக ஆர்வலர்கள் அதிருப்தி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், 16.10 கோடி ரூபாய் செலவில், 200 ஏரிகளை துார்வாரும் பணி, கடந்த மே 16ல் துவக்கப்பட்டது.இதற்கு அரசு நிதி ஒதுக்கியதாக கூறப்பட்ட நிலையில், தனியார் நிறுவனங்களின் நிதி ஒதுக்கீட்டில் இந்த பணிகள் நடப்பதாகவும், அதை மறைத்து, அரசு தன் பெயரை 'லேபிள்' ஒட்டிக் கொள்வதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் புனித தோமையார் மலை, காட்டாங்கொளத்துார், திருப்போரூர், திருக்கழுக்குன்றம், லத்துார், சித்தாமூர், மதுராந்தகம், அச்சிறுபாக்கம் ஆகிய எட்டு ஒன்றியங்களில், 359 ஊராட்சிகள் உள்ளன.
இந்த ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சித் துறையின் கீழ், 620 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள், பல ஆண்டுகளாக துார் வாரப்படாமல் செடி, கொடிகள் முளைத்து, ஆகாயத் தாமரை படர்ந்து, கரையோரங்கள் பலவீனமாக உள்ளதாக, விவசாயிகள் தொடர் புகார் அளித்து வந்தனர்.
இதையடுத்து, ஏரிகளை துார்வார, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
தொடர்ந்து, புனித தோமையார் மலை தவிர்த்து மீதமுள்ள ஏழு ஒன்றியங்களில், மிக மோசமாக உள்ள 200 ஏரிகளை துார் வார, 16.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த ஏப்., 16ம் தேதி டெண்டர் விடப்பட்டு, கடந்த மே 16ம் தேதி பணிகள் துவக்கப்பட்டன.
இந்நிலையில், ஏரிகள் துார்வாரும் பணியில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளதால், கண்காணிப்பு மற்றும் வெளிப்படை தன்மை அவசியம் வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர்.
அது குறித்த செய்தி, நம் நாளிதழில் வெளியான நிலையில், தற்போது மீண்டும் ஒரு புகார் எழுந்து உள்ளது.
அதாவது, 200 ஏரிகளையும் துார் வார, தனியார் நிறுவனங்களே நிதி ஒதுக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அதை மறைத்து, அரசின் சார்பில் நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடப்பது போல், மக்களை நம்ப வைத்துள்ளதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
ஏரிகளை துார் வார அரசின் சார்பில், 16.10 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கடந்த மே 16ம் தேதி, திருப்போரூர் ஒன்றியம், தையூர் கடல் ஏரியில், பூமி பூஜையுடன் பணிகள் துவக்கப்பட்டன.
அந்த நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர் நாராயண சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அப்போது, மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நிருபர்களிடம் கூறுகையில்,''ஏரி துார் வாரும் பணி துவங்கும் போது, திட்டத்தின் பெயர், பணியின் பெயர், ஒதுக்கப்பட்டுள்ள நிதி, ஒப்பந்ததாரர் பெயர் ஆகியவற்றை பெயர் பலகையில் குறிப்பிட வேண்டும்,'' என்றார்.
தவிர, ஏரிக்கரையோரம் பனை மரங்கள் நடவு செய்யவும், கரை வெளிப்பகுதியில் நாட்டு மரக்கன்றுகள் நடவும் அறிவுறுத்தினார்.
அதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 5ம் தேதி காட்டாங்கொளத்துார் ஒன்றியம், ஊனமாஞ்சேரியில் உள்ள சித்தேரியில் துார் வாரும் பணி, பூமி பூஜையுடன் துவக்கப்பட்டது.
அந்த நிகழ்ச்சியிலும், அப்போதைய மாவட்ட கலெக்டர் அருண்ராஜ், கூடுதல் கலெக்டர், தாசில்தார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அந்த நிகழ்ச்சியில், கண்துடைப்பிற்காக,'பொக்லைன்' இயந்திரம் வரவழைக்கப்பட்டு, சிறு குழி தோண்டப்பட்டது.
ஆனால், பூமி பூஜை நடத்தப்பட்ட பின், 20 நாட்கள் கடந்தும், இதுவரை ஏரியில் துார் வாரும் பணிகள் துவக்கப்படவில்லை.
இதுகுறித்து விசாரித்த போது, ஏரியை துார் வாரும் பணிக்கு, தனியார் நிறுவனம் நிதி ஒதுக்கி உள்ளதாகவும், தனியார் நிறுவனத்தின் பெயரை மறைத்து, அரசின் சார்பில் பணிகள் நடப்பது போல், மாவட்ட நிர்வாகம் பரப்புரை செய்ததால், தனியார் நிறுவனம் பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாகவும், தகவல் வந்துள்ளது.
அப்படியென்றால், 200 ஏரிகளையும் துார் வார, தனியார் நிறுவனங்களே நிதி ஒதுக்கி உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இது குறித்து, மாவட்ட நிர்வாகம் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
@block_B@
ஊனமாஞ்சேரி பகுதிவாசிகள் கூறியதாவது:இங்குள்ள சித்தேரி, 250 ஏக்கர் பரப்பில் இருந்தது. தமிழ்நாடு காவல் துறை பயிற்சி மையம் துவக்க, 136 ஏக்கர் பரப்பு ஆக்கிரமிக்கப்பட்டது. தற்போது, 80 ஏக்கர் பரப்பில் தான் ஏரி உள்ளது.ஏரியை துார்வார அரசு நிதி ஒதுக்கி உள்ளதாகவும், அதற்கான பூமி பூஜை எனக் கூறி, கடந்த ஜூன் 5ம் தேதி விழா நடத்தப்பட்டது. அதன் பின், எந்த பணிகளும் நடக்கவில்லை.ஏரியை துார்வார எவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும், எந்த விவரமும் இல்லை.ஹிந்து அறநிலைய துறை சார்பில் 3,000க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளதாக அரசு கூறி வருகிறது.ஆனால், ஒவ்வொரு கோவில் குடமுழுக்கு செலவினங்களையும் தனியார் மற்றும் பொது மக்களே ஏற்றுக் கொண்டனர். அரசு ஏதும் செய்யவில்லை.ஆனால், அரசே செலவு செய்து அனைத்து கோவில்களுக்கும் குடமுழுக்கு நடத்தப்பட்டது போல், ஹிந்து சமய அறநிலையத்துறை அறிக்கை வெளியிடுகிறது.அதுபோல், ஏரி துார் வாரும் பணிக்கு தனியார் நிறுவனங்களே நிதி ஒதுக்கி இருக்கலாம். அந்த தகவலை மறைத்து, அரசே செலவு செய்து, துார் வாரும் பணியை துவக்கியிருப்பது போல், நாடகம் ஆடலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.block_B
மேலும்
-
அனைத்து கழிவுநீர் டேங்கர் லாரிகளிலும் 3 மாதங்களுக்குள் ஜி.பி.எஸ்., கருவி: கோவை மாநகராட்சிக்கு தீர்ப்பாயம் உத்தரவு
-
வடகிழக்கு மின் கழகத்திடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம்
-
மாமரத்திலிருந்து தவறி விழுந்த பெயின்டர் பலி
-
80 வயது மூதாட்டியிடம் ரூ.23,000 'அபேஸ்'
-
நடைபாதை ஆக்கிரமிப்பு: கொட்டிவாக்கத்தில் அகற்றம்
-
பரமக்குடி-ராமநாதபுரம் நான்கு வழிச்சாலை: பிரதமருக்கு நன்றி கூறிய இ.பி.எஸ்.