நடைபாதை ஆக்கிரமிப்பு: கொட்டிவாக்கத்தில் அகற்றம்

சென்னை: இ.சி.ஆரில் பாலவாக்கம், கொட்டிவாக்கத்தில் உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இ.சி.ஆரில் திருவான்மியூர் முதல் அக்கரை வரை, 10.5 கி.மீ., துாரத்தில் நான்கு வழிச்சாலையை, ஆறு வழியாக மாற்றும் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.

இதற்காக அமைக்கப்பட்ட வடிகால்வாய் மற்றும் நடைபாதை மீது ஆக்கிரமிப்புகள் அதிகரித்தன. இதனால் பாதசாரிகள், சாலையில் நடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால், அடிக்கடி விபத்துகள் நடந்தன.

இதையடுத்து, நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை முடிவு செய்தது. போலீஸ் பாதுகாப்புடன், நேற்று கொட்டிவாக்கம், பாலவாக்கத்தில் நடைபாதை மீதிருந்த 50க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மீண்டும் நடைபாதை ஆக்கிரமித்தால் வழக்கு பதிவு செய்யப்படும் என, போலீசார் அவர்களை எச்சரித்தனர்.

Advertisement