அனைத்து கழிவுநீர் டேங்கர் லாரிகளிலும் 3 மாதங்களுக்குள் ஜி.பி.எஸ்., கருவி: கோவை மாநகராட்சிக்கு தீர்ப்பாயம் உத்தரவு
சென்னை: 'அனைத்து கழிவுநீர் டேங்கர் லாரிகளிலும், மூன்று மாதங்களுக்குள் ஜி.பி.எஸ்., கருவி பொருத்தப்படுவதை, கோவை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
கோவை, உக்கடம், அன்புநகர் பகுதியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் குப்பை கிடங்கால் ஏற்படும் துர்நாற்றம், சுகாதார சீர்கேடுகளால், அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இடமாற்றம் செய்யக் கோரி, கோவை மாநகராட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு, மக்கள் போராட்டம் நடத்தினர். இது தொடர்பாக, கடந்த 2023 டிசம்பரில் நாளிதழ்களில் செய்தி வெளியானது. அதன் அடிப்படையில், தாமாக வழக்குப் பதிந்து விசாரித்து வரும் தீர்ப்பாயம், பல்வேறு இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்தது.
இந்நிலையில், தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
அங்கீகரிக்கப்படாத டேங்கர் லாரிகளில் இருந்து, கழிவுநீரை வெளியேற்றுவது, திறந்தவெளியில் கழிவுகளை கொட்டுவது ஆகியவற்றால்தான், உக்கடம் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை இடமாற்றம் செய்வது தேவையற்றது என, தீர்ப்பாயம் கருதுகிறது.
தொடர்ச்சியான சீரமைப்பு, கடுமையான கண்காணிப்பு நடவடிக்கைகளை, கோவை மாநகராட்சி தொடர வேண்டும். தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் பிறப்பித்த அனைத்து உத்தரவுகளையும் செயல்படுத்தி, மீண்டும் புகார்கள் வராமல் இருக்க, மாநகராட்சி விழிப்புடன் இருக்க வேண்டும். கழிவுநீர் டேங்கர் லாரிகள் அனைத்திலும் ஜி.பி.எஸ்., கண்காணிப்பு கருவி பொருத்தப்பட்டிருப்பதை, மூன்று மாதங்களுக்குள், மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும். கழிவுநீர் சுத்திகரிப்பு அமைப்புகளை ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்.
கசடு, மணல் அல்லது பிளாஸ்டிக் கழிவுகளை திறந்தவெளியில் சேமித்து வைக்கும் நடைமுறை முற்றிலுமாக நிறுத்தப்பட வேண்டும். 2016ம் ஆண்டு திடக்கழிவு மேலாண்மை விதிகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
பைக் மீது லாரி மோதி விபத்து; 4 சிறுவர்கள் உள்பட 5 பேர் பலி; உ.பி.,யில் சோகம்
-
மாஜி அமைச்சரின் பினாமி வீட்டில் பல கோடி ரூபாய் கொள்ளை; கணக்கில் காண்பித்ததோ ரூ.44 லட்சம்; டிரைவர் உட்பட 4 பேர் கைது!
-
கம்யூனிஸ்ட் கட்சிகள் 2 சீட்டுக்காக மவுனம்; செல்லுார் ராஜூ கிண்டல்
-
கலிபோர்னியாவில் பட்டாசு கிடங்கில் பயங்கர வெடி விபத்து: உள்ளே சிக்கிய 7 பேரை மீட்க முயற்சி தீவிரம்
-
விசாரணைக்கைதி மீது தாக்குதல்: இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 5 பேர் இடமாற்றம்
-
பரங்கிப்பேட்டை ரயில் நிலையத்தின் 149வது ஆண்டு துவக்க விழா