வடகிழக்கு மின் கழகத்திடம் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் 

1

சென்னை: அருணாச்சல பிரதேசத்தில், வட கிழக்கு மின் கழகம் அமைக்க உள்ள, நீர் மின் நிலையங்களில் இருந்து, மின்சாரம் கொள்முதல் செய்வதற்கு, தமிழக மின் வாரியம், மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தை, மின் வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், சென்னையில், மின் வாரிய நிதிப் பிரிவு இயக்குனர் மலர்விழி, வட கிழக்கு மின் கழக தலைமை பொது மேலாளர் ரிப்யூன்ஜோய் புயன் ஆகியோர், பரிமாறிக் கொண்டனர்.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: அருணாச்சல பிரதேசத்தில் வட கிழக்கு மின் கழகத்துக்கு, 186 மெகா வாட் திறனிலும், 240 மெகா வாட் திறனிலும், நீர் மின் நிலையங்கள் உள்ளன. இதுதவிர, 700 மெகா வாட் திறனில், புதிய நீர் மின் நிலையங்கள் அமைக்க, அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே, அந்நிறுவனத்துடன் மின்சாரம் வாங்க, மின் கொள்முதல் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது.

புதிதாக அமைக்க உள்ளது மட்டுமின்றி, ஏற்கனவே உள்ள மின் நிலையங்களையும் சேர்த்து, உற்பத்தியாகும் அனைத்து மின்சாரத்தையும், தமிழக மின் வாரியத்திற்கு வழங்கினாலும், வாங்க தயார் என, தெரிவிக்கப்பட்டது. ஏனெனில் ஒரு யூனிட் மின்சார விலை சராசரியாக, 4.50 ரூபாய் வருகிறது. அதற்கு அந்நிறுவன அதிகாரிகள் தங்களின் உயர் அதிகாரிகளுடன் பேசி, எவ்வளவு மின்சாரம் வழங்கப்படும் என்பதை தெரிவிப்பதாக தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement