குழந்தைகளுக்கு சூடுவைத்த கொடூர தாய் பொன்னேரியில் அதிர்ச்சி

பொன்னேரி:'சொல் பேச்சு கேட்கவில்லை' எனக்கூறி, பெற்ற தாயே குழந்தைகளுக்கு சூடுவைத்த கொடூர சம்பவம், பொன்னேரியில் நடந்துள்ளது.
பொன்னேரி நகராட்சியில், பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடக்கின்றன. இதற்காக, பல்வேறு பகுதிகளில் இருந்து தொழிலாளர்கள் இங்கு வந்து சிறு குடிசைகள் அமைத்து தங்கி, பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பாலாஜி நகரில் தொழிலாளர்களின் குடிசை பகுதியில், குழந்தைகள் இருவரது கைகள் மற்றும் உடம்பில் ரத்த காயங்களும், தீக்காயங்களும் இருப்பதை, அருகில் வசிப்பவர்கள் கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இது குறித்து பொன்னேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டதில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சத்யா, 23, என்பவரது, 5 வயது பெண் மற்றும் 3 வயது ஆண் குழந்தை என்பது தெரிந்தது.

கணவரை பிரிந்து வாழும் இவர், விழுப்புரத்தைச் சேர்ந்த வேறு ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வருவது தெரிந்தது. குழந்தைகள் தன்னுடைய பேச்சை கேட்காததால், சூடு வைத்ததாக போலீசாரிடம் சத்யா கூறியுள்ளார்.

இதையடுத்து, போலீசார் இரண்டு குழந்தைகளையும் மீட்டு, பொன்னேரி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளுக்கும், தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் கணவருக்கு பிறந்த குழந்தைகள் என்பதால், இரண்டாவது கணவருடன் சேர்ந்து சத்யா சித்ரவதை செய்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement