மணமான 4வது நாளில் உயிரை மாய்த்த இளம்பெண் வரதட்சணை கொடுமையால் மகள் இறந்ததாக குற்றச்சாட்டு

பொன்னேரி:பொன்னேரியில், திருமணமான நான்காவது நாளில் இளம்பெண் தற்கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வரதட்சணை கொடுமையால் மகள் இந்த முடிவு எடுத்ததாக பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.

பொன்னேரி அடுத்த மாதவரம் முஸ்லிம் நகரைச் சேர்ந்தவர் கஜேந்திரன்மகள் லோகேஸ்வரி, 24. இவருக்கும், காட்டாவூர் கிராமத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர், பன்னீர், 37, என்பவருக்கும், கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் நடந்தது.

திருமணத்திற்கு, 10 சவரன் வரதட்சணை கேட்கப்பட்ட நிலையில், ஐந்து சவரன் போடுவதாக கஜேந்திரன் ஒப்புக் கொண்டுள்ளார்.

திருமணத்தின்போது, நான்கு சவரன் நகை, பைக் மற்றும் சீர்வரிசை பொருட்களை கொடுத்துள்ளார். ஒரு சவரன் நகை மட்டும், ஒரு மாதத்திற்கு பின் தருவதாக தெரிவித்து உள்ளார்.

திருமணமான நாளில் இருந்து வரதட்சணை கேட்டு, லோகேஸ்வரியை அவரது கணவரின் குடும்பத்தினர் துன்புறுத்தி உள்ளனர். இதனால், லோகேஸ்வரி மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார். இது குறித்து, பெற்றோரிடமும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம், மறுவீடு விசேஷத்திற்காக பெற்றோர் வீட்டிற்கு, கணவருடன் லோகேஸ்வரி வந்து தங்கியிருந்தார்.

இரவு கழிப்பறைக்கு சென்ற லோகேஸ்வரி, நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த அவரது கணவர், குடும்பத்தினரிடம் தெரிவித்து உள்ளார். அவர்கள் கதவை உடைத்து பார்த்தபோது, அங்கு லோகேஸ்வரி துாக்கிட்டு, மயங்கிய நிலையில் கிடந்தார்.

உடனடியாக அவரை பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். மருத்துவர்களின் பரிசோதனையில் இறந்தது தெரிய வந்தது.

இது குறித்து லோகேஸ்வரியின் பெற்றோர், பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வரதட்சணை கொடுமையால், தன் மகள் தற்கொலை செய்து கொண்டதாக புகாரில் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து லோகேஸ்வரியின் கணவர் பன்னீர் மற்றும் மாமியார் பூங்கோதை, 60, ஆகியோரை கைது செய்தனர்.

திருணமான நான்காவது நாளில், இளம்பெண் துாக்கிட்டு தற்கொலை செய்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement