பா.ஜ.,வுக்கு எதிரான சக்திகள் பலம் பெற்றுவிடும்; பா.ம.க., பிளவை தடுக்க மோடி, அமித் ஷாவுக்கு கடிதம்

3

சென்னை: 'பா.ம.க., பிளவுபட்டால், பா.ஜ.,வுக்கு எதிரான சக்திகள் பலம் பெற்றுவிடும்' என, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு, தமிழகத்தில் பிரபலமான அரசியல் ஆலோசகரும், அமித் ஷாவுக்கு நெருக்கமானவருமான பத்திரிகையாளர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


@1brபா.ம.க., நிறுவனர் ராமதாசுக்கும், அவரது மகனும், பா.ம.க., தலைவருமான அன்புமணிக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.

உடையும் நிலை



இருவருக்கும் இடையே பல்வேறு தரப்பினர் பேச்சு நடத்தியும் சமாதானம் ஏற்படவில்லை. இதனால், பா.ம.க.,வின் எதிர்காலம் கேள்விக்குறியாகி, கட்சி உடையும் நிலை ஏற்பட்டுள்ளது.



இந்நிலையில், பா.ஜ., மேலிடத்திற்கு நீண்ட காலமாக ஆலோசனைகள் வழங்கி வரும் அந்த பத்திரிகையாளர், பா.ம.க., உட்கட்சி குழப்பங்கள் குறித்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதன் விபரம்:



ராமதாசால் துவங்கப்பட்ட வன்னியர் சங்கமும், பா.ம.க.,வும் தமிழகத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக உள்ளன.



ராமதாஸ் இடதுசாரி சிந்தனை கொண்டவர். ஆனால், அவரால் துவங்கப்பட்ட வன்னியர் சங்கமும், பா.ம.க.,வும், இடதுசாரி அரசியலை வீழ்த்தும் சக்தியாக மாறின.


ராமதாஸ் தலைவராக உருவெடுப்பதற்கு முன், தமிழகத்தின் பெரும்பான்மை சமூகங்களில் ஒன்றான வன்னியர் சமுதாய இளைஞர்கள் தனி தமிழ்நாடு கோரிக்கைக்காக ஆயுதம் போராட்டம் நடத்திய தமிழ்த் தேசிய கட்சிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தனர்.


ராமதாசும் கம்யூனிசம், திராவிட இயக்கங்களால் ஈர்க்கப்பட்டவர். அதனால்தான் இன்றும், அவரது வீட்டில் மார்க்ஸ், ஈ.வெ.ரா., சிலைகள் உள்ளன.


ஆனால், வன்னியர் சமுதாயத்தை ஓரணியில் திரட்டினால்தான், திராவிட கட்சிகளை மீறி, தேர்தல் அரசியலில் வெற்றி காண முடியும் என்பதை, ராமதாஸ் உணர்ந்தார். அதனால், வன்னியர்களை அணி திரட்டினார்.

பின்னடைவு



இதனால், திராவிட, கம்யூனிச கட்சிகளை வன்னியர்கள் கைவிட்டனர். தமிழகம் முழுதும் மதமாற்றங்கள் வேகமாக நடந்தபோதும், மற்ற சமுதாயங்களுடன் ஒப்பிடும்போது, மதம் மாறிய வன்னியர்கள் மிக மிகக் குறைவு.



பா.ம.க.,வின் எழுச்சிக்குப் பின், வன்னியர்கள் குலதெய்வ வழிபாட்டில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினார். அவர்களின மத, ஆன்மிகச் செயல்பாடுகளும் அதிகரித்தன.


இதனால், தி.மு.க., கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. கடந்த 2021 தேர்தலில் வன்னியர்கள் அதிகமாக உள்ள மாவட்டங்களில்தான், அ.தி.மு.க., கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைத்தன.


இந்தச் சூழலில், பா.ம.க.,வில் அப்பா -- மகன் இடையே நடக்கும் மோதலை பயன்படுத்தி, அக்கட்சியை உடைக்க சூழ்ச்சி வலை பின்னப்பட்டு உள்ளது.


பா.ம.க., பிளவுபட்டால், ராமதாஸ் தீவிர இடதுசாரி அரசியலை முன்னெடுக்க வாய்ப்பு உள்ளது.
இடதுசாரி சிந்தனை கொண்டவர்கள் ராமதாசை சந்தித்து, அவரை உசுப்பேற்றி வருகின்றனர். இதனால், பா.ஜ.,வின் அரசியல், சிந்தாந்த எதிரிகள் பெரும் பலனடையும் வாய்ப்புள்ளது.



ராமதாஸ் -- அன்புமணி மோதல் துவங்கிய உடனேயே, வன்னிய கிறிஸ்துவர்களை, எம்.பி.சி., பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


எனவே, பா.ம.க., பிளவுபட்டால், பா.ஜ.,வுக்கும், ஹிந்துத்துவத்திற்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். எனவே, பா.ம.க., பிளவுபடுவதை தடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement