எஸ்.பி.,ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

சிவகங்கை: போலீஸ் விசாரணையில் மடப்புரம் கோயில் காவலாளி மரணமடைந்த சம்பவத்தையொட்டி சிவகங்கை மாவட்ட எஸ்.பி.,ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தைச் சேர்ந்தவர் அஜித்குமார் 30. அங்குள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் தனியார் நிறுவன ஒப்பந்த காவலாளியாக பணிபுரிந்தார். ஜூன் 27ஆம் தேதி அக்கோயிலுக்கு சுவாமி கும்பிட மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த நிகிதா தனது தாயாருடன் காரில் வந்தார். காரை பார்க்கிங் செய்ய அங்கிருந்த காவலாளி அஜித்குமாரிடம் சாவியை கொடுத்தார். அவருக்கு கார் ஓட்ட தெரியாததால் மற்றொருவர் உதவியுடன் காரை அஜித்குமார் பார்க்கிங் செய்துவிட்டு சாவியை நிகிதாவிடம் கொடுத்து விட்டார்.
சுவாமி கும்பிட்டு விட்டு நிகிதா காரில் ஏறியபோது பையில் இருந்த 10 பவுன் நகை காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து நிகிதா அளித்த புகாரின் பேரில் அஜித்குமார் உள்ளிட்ட 5 பேரிடம் திருப்புவனம் போலீசார் விசாரித்தனர்.
மற்றவர்களை விடுவித்த நிலையில் அஜித்குமாரை மட்டும் மானாமதுரை உட்கோட்ட தனிப்படை போலீசார் வெளியே அழைத்து சென்று விசாரித்தனர். ஜூன் 28ஆம் தேதி போலீசார் விசாரணை என்ற பெயரில் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார்.அஜித்குமாரை தாக்கி கொலை செய்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அஜித்குமார் உறவினர்கள் மடப்புரத்தில் ஜூன் 28ஆம் தேதி போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் சமரசத்தை அடுத்து மதுரை அரசு மருத்துவமனையில் அஜித்குமார் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதனிடையே தனிப்படை போலீசார் பிரபு, கண்ணன், சங்கரமணிகண்டன், ராஜா, ஆனந்த், ராமச்சந்திரன் ஆகிய 6 பேரை எஸ்.பி., ஆஷிஷ்ராவத் பணியிடை நீக்கம் செய்தார்.
மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் வெங்கடேஷ்பிரசாத், போலீஸ் ஸ்டேஷனில் போலீசாரிடம் விசாரணை நடத்தினார். தனிப்படை போலீசார் மடப்புரம் கோயில் பின்புறம் வைத்து அஜித்குமாரை தாக்கியதாக கூறப்பட்டநிலையில் அந்த இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் காரில் புறப்பட்ட அவரிடம் அங்கிருந்த பெண்கள் முறையாக விசாரணை நடத்த வேண்டுமென முறையிட்டனர். அவர்களிடம் வெங்கடேஷ்பிரசாத் சம்மன் அனுப்பி முறையாக விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார். அஜித்குமாரின் உடலில் காயங்கள் இருந்ததாகவும், ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.இந்நிலையில் நேற்று எஸ்.பி., ஆஷிஷ் ராவத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். ராமநாதபுரம் எஸ்.பி., சந்தீஷூக்கு சிவகங்கை கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. மானாமதுரை டி.எஸ்.பி., சண்முகசுந்தரத்தை பணியிடை நீக்கம் செய்து தென்மண்டல ஐ.ஜி., பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
குற்றப்பிரிவு போலீசார் அஜித்குமாரை விசாரணை என்ற பெயரில் தாக்குதல் நடத்தும் காட்சிகள் வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்
-
தி.மு.க., அரசு மீது படிந்த ரத்தக்கறை விலகாது: அன்புமணி
-
மொத்த ஊழியர்களில் 4 சதவீதம் பேர் பணி நீக்கம்: மைக்ரோசாப்ட் அறிவிப்பு
-
போலீஸ் பிடியில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்துக்கு விஜய் ஆறுதல்
-
நீலகிரி கலெக்டர் படத்தை பயன்படுத்தி வாட்ஸ் அப் வாயிலாக பணம் மோசடி
-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா
-
மாணவன் மீது போலீஸ் தாக்குதலா... விசாரணை...: நெல்லையில் பரபரபரப்பு