மகள் தற்கொலையில் உரிய விசாரணை பழனிசாமியிடம் பெற்றோர் முறையீடு

3

சேலம் : 'மகள் தற்கொலையில் உரிய விசாரணை தேவை' என, பெற்றோர், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியிடம் மனு அளித்து முறையிட்டனர்.

திருப்பூர் மாவட்டம், அவிநாசி, கைகாட்டிபுதுாரைச் சேர்ந்த அண்ணாதுரை, அவரது மனைவி ஜெயசுதா ஆகியோர், சேலம், நெடுஞ்சாலை நகரில், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியை நேற்று சந்தித்து அளித்த மனு:

எங்கள் மகள் ரிதன்யா, 27. அவருக்கு திருமணம் செய்தபோது, 100 சவரன் நகைகள், 62 லட்சம் ரூபாய் மதிப்பில் கார் வழங்கப்பட்டது. மேலும், 200 சவரன் நகைகள் கேட்டு, அவரது கணவர் கவின்குமார், அவரது பெற்றோர் ஈஸ்வரமூர்த்தி - சித்ராதேவி ஆகியோர் ரிதன்யாவுக்கு தொந்தரவு கொடுத்தனர். மனமுடைந்த ரிதன்யா, தற்கொலை செய்து கொண்டார். சேவூர் போலீசார், கவின்குமார், சித்ரா, ஈஸ்வரமூர்த்தியை கைது செய்தனர்.

ஆனால், விசாரணையில் சுணக்கம் ஏற்பட்டுஉள்ளது.

கவின்குமாரின் தாத்தா கிருஷ்ணன், காங்., கட்சி தலைவராக உள்ளார். அவர் விசாரணையை திசை திருப்பி குற்றவாளிகளை தப்ப வைக்க ஏற்பாடு செய்கிறார். இதனால் ரிதன்யா இறப்பில், உரிய முறையில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, அண்ணாதுரை அளித்த பேட்டியில், ''குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். அதற்கு உரிய விசாரணை நடத்த, வழக்கை, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற வேண்டும். இதுதொடர்பாக நீதிமன்றத்தை நாடப்போகிறோம்,'' என, கண்ணீர் மல்க தெரிவித்தார்.

முன்னதாக விபரங்களை கேட்டறிந்த பழனிசாமி, அண்ணாதுரை, அவரது மனைவி ஜெயசுதா உள்ளிட்ட உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Advertisement