காங்கிரசில் இணையும் விவகாரம் சோமசேகர், ஹெப்பார் அமைதி

பெங்களூரு; பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், காங்கிரசில் இணையவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்காமல், எம்.எல்.ஏ.,க்கள் சோமசேகர், சிவராம் ஹெப்பார் ஆகிய இருவரும் அடக்கி வாசிக்கின்றனர்.

பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்களான யஷ்வந்த்பூர் சோமசேகர், யல்லாபூர் சிவராம் ஹெப்பார் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதால், கடந்த மே 27ம் தேதி இருவரும் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். உடனேயே இருவரும் காங்கிரசில் இணைவர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

காங்கிரசில் இணைந்தால் இருவரையும் தகுதி நீக்கம் செய்ய வாய்ப்பு உள்ளது. எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து இடைத்தேர்தல் நடந்தால், இருவரும் வெற்றி பெறுவரா என்பதை உறுதியாக கூற முடியாது.

ஏன் என்றால் யல்லாபூர் பா.ஜ.,வின் கோட்டையாக உள்ளது. யஷ்வந்த்பூரில் ம.ஜ.த., வலுவாக உள்ளது. பா.ஜ., - ம.ஜ.த., ஓட்டு ஒருங்கிணைந்தால், கூட்டணி வேட்பாளர் வெற்றி உறுதியாகிவிடும். இதை கருத்தில் கொண்டே, அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காமல், இருவரும் அமைதியாக உள்ளனர்.

இந்த விஷயம் நடந்து ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும், இருவரும் அடுத்தகட்ட நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை. வழக்கம்போல காங்கிரஸ் தலைவர்களுடன் சேர்ந்து சோமசேகர் சுற்றுகிறார்.

சிவராம் ஹெப்பார் அமைதியாக உள்ளார். 2028 சட்டசபை தேர்தலுக்கு முன்பு, இருவரும் காங்கிரசில் இணையும் வாய்ப்பு உள்ளது.

Advertisement