புலிகள் இறப்பு குறித்து அறிக்கை; அதிகாரிகளுக்கு 10 நாள் 'கெடு'

பெங்களூரு; கர்நாடகாவில் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் இறந்த புலிகளின் எண்ணிக்கை குறித்து, பத்து நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்கும்படி, வனத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டுள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:
கர்நாடகாவில் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் 82 புலிகள் இறந்ததாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த ஐந்தரை ஆண்டுகளில் மாநிலத்தில் இறந்த புலிகளின் எண்ணிக்கை குறித்து, பத்து நாட்களுக்குள் விரிவான அறிக்கையை வனத்துறை அதிகாரிகள் சமர்ப்பிக்க வேண்டும்.
இயற்கை மரணமா அல்லது வேட்டையின்போது இறந்ததா என புலிகள் இறந்ததற்கான காரணம் குறித்து தனித்தனியே குறிப்பிட வேண்டும். ஒவ்வொரு புலியின் மரணம் குறித்தும் முதன்மை தலைமை வன பாதுகாவலர், கூடுதல் தலைமை செயலர் விளக்கம் அளிக்க வேண்டும்.
இயற்கைக்கு மாறாக மரணம் அடைந்த புலிகளின் உடலில் இருந்து ஏதேனும் பாகங்கள் எடுக்கப்பட்டதா, புலி வேட்டையில் எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்பதையும் குறிப்பிட வேண்டும்.
சாம்ராஜ்நகர் கவுடல்லி மலையில் சிறுத்தை கொல்லப்பட்டது குறித்து, கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் தலைமையில் விசாரணை நடத்தப்படும். எம்.எம்., மலையில், கடந்த மாதம் இறந்த சிறுத்தையின் கால்கள் துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து விசாரிக்கப்பட்டு, ஏழு நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையில், அதிகாரிகள் மீது தவறு இருப்பது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.